பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் 4ஆண்டுகளுக்கும் மேலாக திமுக அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் சங்கங்கள் குற்றம்சாட்டி வருகின்றன.
கொந்தளிப்பில் அரசு ஊழியர்கள்
பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக நடத்தப்பட்ட பல்வேறு பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்தன. பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்த்த நிலையில், அதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் கொந்தளிப்பில் உள்ள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தன.
தமிழக அரசு எச்சரிக்கை
பணிக்கு வராமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பகுதிநேர ஊழியர்கள், தினசரி ஊதியம், ஒப்பந்த ஊதியம் பெறுபவர்கள், பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.