உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் வைத்திருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஸ்டார்லிங். சர்வதேச அளவில் 130 நாடுகளுக்கு சாட்டிலைட் மூலம் இன்டெர்நெட் சேவை வழங்கி வருகிறது. இந்தியாவிலும் இதன் சேவையை துவங்க 2 ஆண்டுக்கு முன்பு அனுமதி கோரி விண்ணப்பித்தது. ஆனால் உள் நாட்டு பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை காரணம் காட்டி நம் அரசு உடனடியாக அனுமதி வழங்கவில்லை.
2 ஆண்டு காத்திருந்த ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு இப்போது அனுமதி கிடைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, சாட்டிலைட் இன்டெர்நெட் சேவையை துவங்குவதற்கான சாட்டிலைட் கம்யூனிகேஷன் என்ற உரிமத்தை மத்திய தொலைத்தொடர்புத்துறை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த உரிமத்தை இதுவரை 3 நிறுவனங்களுக்கு மட்டுமே இந்தியா வழங்கி இருக்கிறது. ஜியோ, யூடெல்சாட் ஒன்வெப் நிறுவனங்களுக்கு பிறகு எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு தான் இந்த லைசன்ஸ் கிடைத்துள்ளது. எனவே ஸ்டார்லிங் தனது இன்டர்நெட் சேவையை இந்தியாவிலும் விரைவில் துவங்க போகிறது. இது ஸ்டார்லிங் நிறுவனத்துக்கும் இந்தியாவுக்கும் முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
ஸ்டார்லிங் மூலம் இந்தியாவின் கிராமப்புற பகுதிகளுக்கும் மலிவு விலையில் அதிவேக இன்டர்நெட் சேவை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகி உள்ளது. எலான் மஸ்க் நிறுவனத்தின் என்ட்ரியை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தயா சில நாட்களுக்கு முன்பு உறுதி செய்திருந்தார். ‛பூங்கொத்தில் ஒரு புதிய மலர்’ என்று ஸ்டார்லிங் வருகையை அவர் குறிப்பிட்டார். அதோடு, ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு விரைவில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடக்கும் என்றும் சொல்லி இருந்தார். இந்த நிலையில் தான் ஸ்டார்லிங் நிறுவனத்துக்கு மத்திய அரசு லைசன்ஸ் வழங்கிய செய்தி இப்போது வெளியாகி உள்ளது.