எலான் மஸ்கின் 'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனமும், அமெரிக்காவின் 'ஆக்சியம் ஸ்பேஸ்' நிறுவனமும் இணைந்து 2022ல் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்கலத்தை அனுப்பின. அதுதான் உலகின் முதல் தனியார் விண்கலம். தொடர்ந்து 'ஆக்சியம்-4' என்ற பெயரில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டது.
ஜூன் 10ம் தேதி விண்கலம் ஏவப்பட இருந்த நிலையில் தொழில்நுட்பம், வானிலை காரணமாக அடுத்தடுத்து 6 முறை ஒத்தி வைக்கப்பட்டது. கடைசியாக, கடந்த 22ம் தேதி விண்கலம் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்ட நிலையில், தொழில்நுட்ப கோளாறால் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக நாசா தெரிவித்தது. பின்னர் அனைத்து தொழில்நுட்ப பணிகளும் முடிந்து, நேற்று மதியம் 12.01க்கு அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து 'பால்கன்-9' ராக்கெட் மூலம், 'டிராகன்' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
இந்த விண்கலத்தில் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி நாடுகளை சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணம் செய்துள்ளனர். டிராகன்' விண்கலம் சுமார் 28 மணி நேரத்தில் 418 கி.மீ. பயணித்து சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்துள்ளது. தொடர்ந்து 'டிராகன்' விண்கலம் விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 41 ஆண்டுகளுக்கு பிறகு விண்வெளி நிலையம் சென்ற இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைத்துள்ளார்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் 14 நாட்கள் தங்கி 60 ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளனர். புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் விதைகளின் விளைச்சல் உள்ளிட்ட பல்வேறு தாவரவியல் சார்ந்த ஆய்வுகளையும் சுபான்ஷு சுக்லா செய்ய உள்ளார்.
இதன்மூலம் இந்தியாவின் முதல் 'விண்வெளி விவசாயி' என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற உள்ளார். டிராகன் விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த நிகழ்வை, இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் சேர்ந்து சுபான்ஷு சுக்லாவின் பெற்றோர் கண்டு மகிழ்ந்தனர்.