சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள Pub பப்–ல் கடந்த மாதம் ஏற்பட்ட அடிதடி தொடர்பாக, அப்போது அதிமுக ஐடி விங் நிர்வாகியாக இருந்த பிரசாத் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பிரசாத், போதைப்பொருள் சப்ளை செய்தது விசாரணையில் தெரியவந்தது. அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கொக்கைன் சப்ளை வழக்கில் கைதான பிரதீப் குமாரிடமும் விசாரணை நடந்தது. பிரதீப் மூலமாக, நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்டோருக்கு போதை சப்ளை செய்ததை பிரசாத் ஒப்புக்கொண்டார்.
அதன் அடிப்படையில், சென்னை நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் ஸ்ரீகாந்திடம் விசாரணை நடந்தது. அப்போது, அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பிரசாத்திடம் இருந்து 1 கிராம் கொகைன் போதைப்பொருளை 12 ஆயிரம் ரூபாய்க்கு நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட 40 முறைக்கு மேல் போதைப்பொருள் அவர் வாங்கியதாக கூறப்படுகிறது. போதைப்பொருள் வழக்கில் திரையுலகை சேர்ந்தவர்கள் உட்படவேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது? என்பது குறித்து நுங்கம்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.