World News

ஈரானை தாக்கிய அமெரிக்கா


ஈரானை தாக்கிய அமெரிக்கா

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இன்று அமெரிக்காவும் நேரடியாக களம் இறங்கியதால் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.

ஈரானின் பிரதான அணு ஆய்வு கூடங்களான ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்பஹான் அணு கூடங்களை போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியும், நீர்மூழ்கி கப்பல்கள் மூலம் ஏவுகணைகள் வீசியும் தாக்குதல் நடத்தியது.

அணு ஆயுதமே தயாரிக்க முடியாத அளவுக்கு 3 அணு ஆய்வு கூடங்களையும் முற்றிலும் அழித்து விட்டதாக டிரம்ப் அறிவித்தார்.

அமெரிக்காவின் தாக்குதலால் போர் இன்னும் தீவிரம் அடையும் அபாயம் தொற்றி உள்ளது.

இந்த நிலையில் ஈரானுக்கு ஆதரவாக பாகிஸ்தான் இறங்கியது. அமெரிக்காவுக்கு பகிரங்கமாக கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:

இஸ்ரேலை தொடர்ந்து ஈரானின் அணு ஆய்வு கூடங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியதை பாகிஸ்தான் கண்டிக்கிறது.

இந்த தாக்குதலால் மத்திய கிழக்கில் போரின் தீவிரம் இன்னும் விரிவடையும் அபாயம் இருப்பதை நினைத்து கவலைப்படுகிறோம்.

அமெரிக்காவின் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்கள் அனைத்தையும் மீறி விட்டன.

ஐநா சட்டப்படி தன்னை தற்காத்துக்கொள்ளும் முழு உரிமையும் ஈரானுக்கு உண்டு.

அப்பாவி மக்கள் மற்றும் பொருளாதார சேதத்தை மனதில் வைத்து உடனடியாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.

அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களை மதித்து நடக்க வேண்டும். ஐநா அமைத்து தந்த அமைதி பேச்சு வார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகள் மட்டுமே பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியும் என்று அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் பாடம் நடத்தி உள்ளது.

இப்போது ஈரானில் தாக்குதல் நடத்தி இருக்கும் இதே அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் மற்றும் அதன் தலைமை ராணுவ தளபதி அசிம் முனீரிடம் இருந்து சமீபத்தில் தான் பரிந்துரை வந்தது.

அதற்குள் ஈரானை தாக்கிய அமெரிக்காவை கண்டிக்கிறோம் என்று இப்போது அந்தர் பல்டி அடித்து இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவில் நடந்த டின்னர் விருந்தில் பாகிஸ்தான் தலைமை தளபதி அசிம் முனீர் பங்கேற்றார்.

அப்போது ஈரானை தாக்க பாகிஸ்தானின் ராணுவ தளங்கள், வான் படை தளங்கள், கடற்படை தளங்களை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று டிரம்ப் கேட்டு இருந்தார்.

அவர் இப்படி பகிரங்கமாக கேட்டு இருந்த பிறகும் கூட டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் சொல்லி இருந்தது.

இப்போது அமெரிக்காவை கடுமையாக கண்டித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

For more details and updates, visit Thagavalulagam regularly!