அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, டொனால்ட் டிரம்புக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் தீவிர பிரசாரம் செய்தார். டிரம்பின் குடியரசு கட்சிக்கு தேர்தல் நிதியாக பணத்தை அள்ளிக்கொடுத்தார். இதனால், டிரம்ப்– மஸ்க் இடையேயான நட்பு ஆழமானது. டிரம்ப் அதிபராக ஆனதும், தாம் ஏற்கனவே சொன்னபடி, தமது அரசில் எலான் மக்ஸ்க்கு முக்கிய இடம் தந்தார். அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறை தலைவராக மஸ்க்கை டிரம்ப் நியமித்தார். அரசின் தேவையற்ற செலவுகளை குறைப்பது இந்த துறையின் முக்கிய நோக்கம். அதற்கான பணிகளில் அதிரடியாக இயங்கினார் மஸ்க்.
இச்சூழலில், டிரம்ப் அரசு தாக்கல் செய்த வரி மற்றும் சலுகை மசோதாவுக்கு எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்தார். இருவருக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதால் பதவியில் இருந்து விலகினார் எலான் மஸ்க். அதிபர் டிரம்ப் கூறும்போது, அமெரிக்காவின் வரி மற்றும் சலுகை மசோதாவின் அசம்சங்கள் பற்றி இங்கு இருப்பவர்களை விட மஸ்க்குக்கு நன்றாக தெரியும். இருப்பினும் எதிர்க்கிறார். மஸ்க் எனக்கு எதிராக இருப்பது பற்றி கவலையில்லை. நாங்கள் சிறந்த நட்புடன்தான் இருந்தோம். இனியும் அப்படி இருப்போமா என்பது தெரியவில்லை என டிரம்ப் கூறியிருந்தார்.
தமது பட்ஜெட்டில் பில்லியன் கணக்கான டாலர்களை சேமிப்பதற்கான எளிதான வழி, எலான் மஸ்க் நிறுவனத்துக்கு அரசு மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் டிரம்ப் பதிவிட்டு இருந்தார். இது இருவரின் நட்பை மேலும் சிக்கல் ஆக்கியது. அதிபர் டிரம்புக்கு பதிலளித்த எலான் மஸ்க், நான் மட்டும் இல்லையென்றால் அதிபர் தேர்தலில் டிரம்ப் தோற்று இருப்பார். அவர் நன்றி இல்லாதவராக இருக்கிறார். அந்த மசோதா பொருளாதார மந்த நிலையை உருவாக்கும்.
எனது நிறுவனத்தின் ஒப்பந்த்தை அரசு நிறுத்தினால், டிராகன் விண்கலம் உடனடியாக தனது பணியை நிறுத்தும் என்று மஸ்க் கூறியுள்ளார். இதற்கு பதில் அளித்த அதிபர் டிரம்ப், அவர் சொல்வது போல் இல்லை. நான் பென்சில்வேனியாவை வென்று அதிக வித்தியாசத்தில் வென்று இருப்பேன் எனக்கூறியுள்ளார். பொதுவெளியில் ஒருவர் மீது ஒருவர் விமர்சனங்களை முன்வைத்து வருவது,நண்பர்களாக இருந்த எலான் மஸ்க் அதிபர் டிரம்ப் இடையே மோதல் உக்கிரம் அடைந்துள்ளதை காட்டுகிறது.