ரஷ்யாவில் மக்கள் தொகை கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேகமாக குறைந்து வருகிறது. உக்ரைன் உடனான போரில் சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல இளைஞர்கள் போர் சூழலை காட்டி வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்கின்றனர். நிலையான மக்கள் தொகைக்கு ஒரு பெண் சராசரியாக 2.01 குழந்தை பெற வேண்டும் என ரஷ்ய அரசு எதிர்பார்க்கிறது.
ஆனால் 2023 வரை ஒரு பெண் சராசரியாக 1.41 குழந்தை மட்டுமே பெற்றெடுக்கிறார். இதனால் மக்கள் தொகை சரியத் தொடங்கியுள்ளது. அதை சரி செய்ய அரசு புதிய முயற்சியை எடுத்துள்ளது. சட்டப்படி குழந்தை பெற தகுதியான வயதை அடைந்த பள்ளி, கல்லூரி மாணவிகள் குழந்தை பெற ஒப்புக்கொண்டால், ஒரு குழந்தைக்கு தலா 90 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக ரஷ்ய அரசு அறிவித்தது.
கடந்த மார்ச்சில் சோதனை முயற்சியாக 10 மாகாணங்களில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. ரஷ்யாவின் இந்த திட்டத்துக்கு அந்த நாட்டைச் சேர்ந்த 40 சதவீதம் பேர் எதிர்ப்பும், 43 சதவீதம் பேர் ஆதரவும் தெரிவிக்கின்றனர். பதின் பருவ வயதுடையவர்களை பிள்ளை பெற ஊக்குவிக்கும் ரஷ்யாவின் முயற்சி, உலகம் முழுவதையும் கடும் விமர்சனங்களை சம்பாதித்து வருகிறது. குழந்தை பெற ஊக்குவிக்கும் திட்டம் தவிர, மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்ய அரசு மேலும் சில முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறது.
ரஷ்யாவில் குழந்தை இல்லாத வாழ்க்கை முறையை பிரசாரம் செய்து வருகின்றனர். அதை தடை செய்வதற்கான மசோதாவை அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. அத்துடன் 10 அல்லது அதற்கும் அதிகமாக குழந்தைகளை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கு மதர் ஹீரோயின் விருதுடன், 10 லட்சம் ரூபாய் பணம் வழங்குகிறது.