மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியை நிறுவிய பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே. இவரது சித்தப்பா மகன் ராஜ் தாக்கரே. 2005ல் பால்தாக்கரேவின் அரசியல் வாரிசு யார் என்பதில் ஏற்பட்ட மோதலில், ராஜ்தாக்கரே கட்சியை விட்டு வெளியேறி, மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியை தொடங்கினார். அதன் பின் அண்ணன், தம்பி இருவரும் பிரிந்தனர். குடும்ப நிகழ்ச்சிகளில் கூட ஆபூர்வமாகவே ஒன்றாக கலந்து கொண்டனர். இச்சூழலில், மகாராஷ்டிரா பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை, மராத்தி, ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக இந்தி பாடம் கட்டாயம் என்று அரசு அறிவித்தது.
பாஜ மகாயுதி அரசின் இந்த மும்மொழி கொள்கையை எதிர்கட்சிகள் எதிர்த்தன. இதனிடையே, மும்மொழி கொள்கையை தற்காலிகமாக மாநில அரசு நிறுத்தி வைத்தது. இந்தி கட்டாயம் ஆக்கப்படுவதை எதிர்த்த ராஜ்தாக்கரே, மராத்தி மொழியை காக்க, உத்தவ் உடன் இணைந்து செயல்படவும் தயாராக இருப்பதாக தெரிவித்தார். அதற்கு உத்தவ் தாக்கரேவும் சாதகமாக பதில் கொடுத்தார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணன் தம்பி இருவரும் முதல் முறையாக ஒருங்கிணைந்து மும்மொழி கொள்கைக்கு எதிராக பேரணி நடத்தினர். மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் உத்தவ் தாக்ரேவின் சிவசேனா மற்றும் நவநிர்மாண் சேனா கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேடையில் இருவரும் கட்டியணைத்து ஒற்றுமையை வெளிக்காட்டியது தொண்டர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ராஜ் தாக்ரே பேசும்போது, மகாராஷ்டிராவிட எங்கள் அரசியல் சண்டை ஒன்றும் பெரிதல்ல. 20 ஆண்டுகளுக்கு பின் நாங்கள் இணைந்துள்ளோம். எங்களை ஒருங்கிணைக்கும் வேலையை முதல்வர் பட்னவிஸ் செய்து இருக்கிறார். இந்தி பேசும் மாநிலங்களை விட நாம் முன்னணியில் இருக்கிறோம். இருந்தாலும், இந்தி கற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்படுகிறது? இந்தி மொழியை எதிர்க்கவில்லை. மராட்டிய பேரரசின்போது, பல மாநிலங்களை ஆட்சி செய்தோம். அந்த பகுதிகளில் நாங்கள் மராத்தியை ஒருபோதும் திணிக்கவில்லை. ஆனால், அவர்களோ எங்கள் மீது இந்தியை திணிக்க தொடங்கி உள்ளனர். இங்கு, குஜராத்தி அல்லது வேறு யாராக இருந்தாலும் மராத்தி தெரிந்திருக்க வேண்டும். அதற்காக, மராத்தி பேசாவிட்டால் அவர்களை அடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், யாராவது இந்த விஷயத்தில் தேவையில்லாமல் நாடகம் ஆடினால், அவர்களின் காதுகளுக்கு கீழே அடியுங்கள். அதை வீடியோ எடுத்து மற்றவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டியது இல்லை. அடி வாங்கியவரே சொல்லட்டும் என ராஜ் தாக்கரே கூறினார். உத்தவ் தாக்கரே பேசும்போது, நாங்கள் ஒன்றாக இருக்கவே ஒன்றாக வந்து இருக்கிறோம் என்றார். பாஜவை தாக்கி பேசிய அவர், தேவையான அளவுக்கு எங்களை பயன்படுத்தி கொண்டீர்கள். 11 ஆண்டுகால ஆட்சியில் மகாராஷ்டிராவுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்? மும்பையின் முக்கிய வணிக நிறுவனங்களை குஜராத்துக்கு மாற்றிவிட்டீர்கள். வைர வியாபாரம் ஏற்கனேவே அங்கு போய்விட்டது.
மகாராஷ்டிராவின் முதுகெலும்பை உடைத்ததுடன் தொடர்ந்து அதை செய்கிறீர்கள் என உத்தவ் கூறினார். தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்கு பின் ஒன்று சேர்ந்து இருப்பது மகாராஷ்டிரா அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் இந்த ஒருங்கிணைப்பு தொடர வேண்டும் என்று தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பார்பு எழுந்துள்ளது.