கொல்கத்தா சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவியை, அதே கல்லூரியின் ஊழியர், மாணவர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. கொடூரன்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மாணவியின் மருத்துவ பரிசோதனை முடிவுகளும், க்ரைம் சீனில் என்ன நடந்தது என்பது பற்றி அவர் புகாரில் சொன்ன முழு விவரமும் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.
கொல்கத்தாவின் கஸ்பா பகுதியில் சவுத் கல்கத்தா சட்டக்கல்லூரி உள்ளது.
இங்கு படிக்கும் 24 வயதான மாணவி தேர்வு கட்டணத்துக்கான படிவத்தை நிரப்ப புதன்கிழமை பகல் 12 மணிக்கு கல்லூரிக்கு சென்றார்.
கல்லூரியில் திரிணாமுல் கட்சியின் மாணவர் அமைப்பு செயல்படுகிறது.
கல்லூரி நேரத்துக்கு பிறகு இந்த அமைப்பு மீட்டிங் நடந்தது. அமைப்பில் மாணவிக்கும் பொறுப்பு இருந்தது.
இதனால் அவரும் மற்ற நிர்வாகிகளும் அந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தை 31 வயதான மனோஜித் மிஸ்ரா என்பவன் நடத்தினான். இவன் தான் மாணவி சம்பவத்தில் முக்கிய குற்றவாளி.
இவன் சக்தி வாய்ந்த அரசியல் பின்னணி உடையவன்.
திரிணாமுல் மாணவர் அமைப்பின் கொல்கத்தா தெற்கு மாவட்ட பொதுச்செயலாளராக இருந்தான்.
சம்பவம் நடந்த அதே சட்ட கல்லூரியில் தான் படித்தான். குற்றவியல் வக்கீல் ஆனான்.
மீண்டும் அதே கல்லூரியில் ஊழியராக பணியில் சேர்ந்தான்.
அதோடு, கல்லூரியில் திரிணாமுல் மாணவர் அமைப்பின் அறிவிக்கப்படாத தலைவனாகவும் இருந்தான். கல்லூரி வளாகத்தில் அவனுக்கு மிகப்பெரிய அளவில் செல்வாக்கு இருந்தது. அவன் சொல்வதை தட்டிக்கழிக்காமல் கேட்க வேண்டும். அன்று மாலை நடந்த மீட்டிங்கிலும் வீராவேசமாக பேசினான். அவனுக்கு ஏற்கனவே பாதிக்கப்பட்ட மாணவி மேல் ஒரு கண் இருந்தது.
எப்படியாவது அவரை அடைந்து விட வேண்டும் என்று நினைத்தான். மீட்டிங் நடந்த அன்றே இதற்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைத்தான்.
அதே கல்லூரியில் படிக்கும் மாணவர்களான ஜைப் அகமது வயது 19, பிரமித் முகர்ஜி வயது 20 ஆகியோர் மனோஜித் மிஸ்ராவுக்கு நெருக்கமானவர்கள்.
2 மாணவர்களிடமும் மீட்டிங் நடக்கும் முன்பே மாணவி பற்றி நிறைய விஷயங்களை மனோஜித் மிஸ்ரா சொல்லி இருந்தான்.
மீட்டிங் முடியும் தருவாயில் ஜைப் அகமதுவும், பிரமித் முகர்ஜியும் மாணவியை திடீரென யூனியன் அறைக்கு வெளியே அழைத்து வந்தனர்.
‛மனோஜித் தாதா என்ன சொன்னாலும் கேட்க வேண்டும்; அவருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும்’ என்று கூறினர். மீண்டும் மாணவியை உள்ளே அழைத்து வந்தனர். அவர்கள் சொன்னது புரிந்ததா என்று மனோஜித் மிஸ்ரா கேட்டான். மாணவர் அமைப்பில் பொறுப்பில் இருந்ததால், அமைப்பு காரியங்களில் உறுதியாக இருப்பேன் என்று அந்த மாணவியும் பதில் அளித்தார்.
மீட்டிங் முடிந்ததும் பங்கேற்ற மாணவர்கள் கலைந்து சென்றனர். மாணவியை மட்டும் காத்திருக்கும்படி மனோஜித் மிஸ்ரா சொன்னான். மற்றவர்கள் போனதும், நீ என்னை திருமணம் செய்துகொள்வியா என்று மாணவியிடம் கேட்டான்.
எனக்கு ஏற்கனவே லவ்வர் இருக்கிறான் என்று மாணவி சொன்னார். ஆத்திரம் அடைந்த மனோஜித் மிஸ்ரா, நீ என்னை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று மிரட்டினான். மாணவி ஏற்கவில்லை.
‛எனக்கு என் லவ்வர் தான் உயிர். அவனை தான் கல்யாணம் செய்து கொள்வேன். அவனை ரொம்ப லவ் பண்றேன்’ என்று கூறினார்.
ஆத்திரம் அடைந்த மனோஜித் மிஸ்ரா, உன் லவ்வரை கொலை செய்து விடுவேன் என்றும் அம்மா அப்பா மேல் பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் என்றும் மிரட்டினான்.
மற்ற 2 பேருடன் சேர்ந்து மிருகம் போல் மாணவியிடம் பலவந்தமாக நடக்க ஆரம்பித்தான்.
அவர்கள் தன்னை பலாத்காரம் செய்ய முயற்சிப்பதை அறிந்த மாணவி அவர்களை தள்ளி விட்டு ஓட பார்த்தார்.
அதற்குள் ஒருத்தன் ஓடி சென்று மெயின் கேட்டை மூடினான். பின்னர் மாணவியை செக்யூரிட்டி ரூமுக்கு இழுத்து சென்றனர்.
அங்கிருந்த காவலாளியை மிரட்டி அடித்து அனுப்பினர். பின்னர் ரூம் கதவை மூடினர்.
மாணவி எவ்வளவோ கெஞ்சியும் விடவில்லை. மனோஜித் மிஸ்ரா காலை பிடித்து, விட்டு விடுங்கள் என்று கதறினாள். ஆனாலும் அவன் கேட்கவில்லை.
பதட்டத்தில் மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. உடனே பையில் இருக்கும் இன்ஹேலரை எடுத்து தாருங்கள் என்று கூச்சலிட்டார்.
மூவரில் ஒருத்தன் இன்ஹேலரை எடுத்து வந்து கொடுத்தான். அதை பயன்படுத்தியதும் மாணவி இயல்பு நிலைக்கு திரும்பினார்.
உடனே மாணவியின் ஆடையை கழற்றி, அவரை மிரட்டி பலாத்காரம் செய்தான் மனோஜித் மிஸ்ரா.
அவனிடம் இருந்து தப்பிக்க முயன்ற மாணவியை ஹாக்கி ஸ்டிக்கால் தலையில் அடித்தான். மாணவியிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்து கொண்டான்.
அவன் பலாத்காரம் செய்யும் போது மற்ற 2 பேரும் பக்கத்தில் நின்று பார்த்தனர். வீடியோவும் எடுத்தனர்.
அந்த வீடியோவை காட்டி மனோஜித் மிஸ்ரா மீண்டும் மாணவியை மிரட்டினான்.
நடந்ததை வெளியே சொன்னால் அவ்வளவு தான். வீடியோ மொத்த கல்லூரிக்கும் பரவிவிடும் என்று எச்சரித்தான். இரவு 10:50 மணிக்கு மாணவியை வெளியே விட்டனர்.
‛நான் ஒரு சட்ட கல்லூரி மாணவி. இப்போது நானே பாதிக்கப்பட்டு இருக்கிறேன். தைரியமாக புகார் கொடுக்க வந்திருக்கிறேன். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்’ என்று தனது புகாரில் மாணவி சொல்லி இருந்தார்.
மாணவியின் புகாரின் பேரில் மனோஜித் மிஸ்ரா உட்பட 3 கொடூரன்களும் கைது செய்யப்பட்டனர். 5 நாள் போலீஸ் கஸ்டடியில் அவர்களிடம் விசாரணை நடக்கிறது.
இதற்கிடையே மாணவியிடம் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
மாணவியின் உடலில் பல இடங்களில் கொடிய காயங்கள் இருக்கின்றன.
குறிப்பாக பலாத்காரத்தின் போது பல இடங்களில் கொடூரமான மாணவியை கடித்து இருக்கிறான் மனோஜித் மிஸ்ரா. உடலின் பல பகுதிகளில் நகக்கீறல்களும் இருக்கின்றன.
மாணவி பலவந்தமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டு இருப்பதையும் மருத்துவ பரிசோதனை உறுதி செய்து இருக்கிறது என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஆர்ஜி கர் மருத்துவமனையில் கொடூரமான முறையில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தின் வடுவே ஆறாத நிலையில் அடுத்த சம்பவம் கொல்கத்தா நகரத்தை இப்போது உலுக்கிக்கொண்டிருக்கிறது.