இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மும்பை நோக்கி சிங்கப்பூர் சரக்கு கப்பல் கடந்த 7ம் தேதி கிளம்பியது. நாளை மும்பை சென்றடைய இருந்த நிலையில் கேரளாவின் கோழிக்கோடு பேய்பூர் கடல் பகுதியில் இருந்து வடக்கே 70 கடல் மைல் தொலைவில் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து கொச்சியில் உள்ள கடல் கண்காணிப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இந்திய கடற்படையினரும், கடலோர காவல் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். கொச்சி, பேய்பூரில் இருந்து 3 படகுகளில் மேலும் சில கடலோர காவல்படை வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். ஐஎன்எஸ் சூரத் கப்பலும் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்தது. சிங்கப்பூர் கப்பலில் இருந்த 650 கண்டெயினர்களில் ஒன்று வெடித்து சிதறியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மேலும் 4 கண்டெயினர்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய பொருட்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. கப்பலில் பயணித்த 22 பணியாளர்களில் 18 பேர் மீட்கப்பட்டனர். 5 பேர் படுகாயங்களுடன் உள்ளனர். மாயமான 4 பணியாளர்களை தேடும் பணி நடக்கிறது. கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் மூலம் விபத்து நடந்த பகுதி கண்காணிக்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த மே மாதம் 24ம் தேதி கொச்சி அருகே லைபீரியா நாட்டின் சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதனால் நீரில் அடித்துச் செல்லப்பட்ட கன்டெய்னர்களில் இருந்த எண்ணெய் தண்ணீரில் கலந்து அபாயத்தை உண்டாக்கியது. இந்த சம்பவம் நடந்த இரண்டே வாரத்தில் மற்றொரு சரக்கு கப்பல் விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.