தாம்பரம் அடுத்த சானிட்டோரியம் ஜட்ஜ் காலனியில் சமூகநலத்துறை சார்பில் அரசு சேவை இல்லம் செயல்படுகிறது. இங்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 128 மாணவிகள் தங்கி, பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். அதில் 8ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடந்த கொடூரம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த அந்த 13 வயது சிறுமி, கடந்த 4 நாட்களுக்கு முன்புதான் இந்த விடுதியில் சேர்ந்துள்ளார். நேற்று ஞாயிறு என்பதால், சிறுமி தூங்கிக்கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சிறுமியின் முகத்தில் துணியால் மூடி தூக்கிச் சென்றுள்ளார். பின்னர், அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளார். அப்போது, தப்பியோட முயன்ற சிறுமியை அந்த ஆசாமி தடுத்து தாக்கியுள்ளார்.
படுகாயமடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். சத்தம் கேட்டு வந்த சக மாணவிகள், சிறுமியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், 2 காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டதால், மேல் சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்த புகாரின்பேரில் சிட்லப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அரசு சேவை இல்லத்தின் காம்ப்பவுண்ட் சுவர் அதிக உயரம் என்பதால், வெளியாட்கள் யாரும் உள்ளே எகிறி குதித்து வர வாய்ப்பில்லை. அதேபோல், இல்லத்தினம் முன் பகுதியில் காவலாளி இருப்பதால் கேட் வழியாகவும் வெளி ஆட்கள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை என்பதும் இறுதியானது.
இதனால் அரசு சேவை இல்லத்தில் பணிபுரிந்த செக்யூரிட்டியை சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்து சென்று விசாரித்தினர். முதலில் எதுவுமே தெரியாதது போல் நடித்த செக்யூரிட்டி, போலீசாரின் கிடுக்குப்பிடி விசாரணையில் உண்மையை கக்கினார். அவர் தான் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து, சேலையூர் மகளிர் போலீசார் செக்யூரிட்டியிடம் விசாரித்தனர். அவர் சிட்லப்பாக்கம் பெரியார் நகரை சேர்ந்த 50 வயது மேத்யூ என்பது தெரிந்தது. இவரது தாயார் அதே அரசு சேவை இல்லத்தில் உதவியாளராக வேலை செய்துள்ளார். அவர் பணியில் இருக்கும்போது இறந்ததால், கருணை அடிப்படையில் மேத்யூவிற்கு காவலாளி பணி கிடைத்தது. அதன்பிறகு கடந்த 14 ஆண்டுகளாக அவர் இங்கு செக்யூரிட்டியாக வேலை செய்து வந்துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவி 4 நாட்களுக்கு முன்பு தான் வந்தார் என்பதால், வெளியே எதையும் சொல்ல மாட்டார் என நினைத்து அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். மேத்யூ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த சேலையூர் மகளிர் போலீசார், அவரை கைது செய்தனர். நீதிபதி முன் ஆஜர்படுத்த ஸ்டேஷனில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது செய்தியாளர்கள் வீடியோ எடுத்தனர். அப்போது வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது என மேத்யூவின் மகன் செய்தியாளரை தாக்கியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை முடித்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கைதான மேத்யூ இதேபோன்று வேறு யாருக்காவது பாலியல் தொல்லை கொடுத்துள்ளாரா? என்ற கோணத்தில் அங்கு தங்கியுள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்துகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேட்டியளித்த சமூக நல அமைச்சர் கீதா ஜீவன், முதல்வர் உத்தரவுபடி அனைத்து சேவை இல்லங்களிலும் பெண் காவலர்களை நியமிக்க முடிவெடுத்துள்ளதாக கூறினார்.