துபாயை தலைமையிடமாக கொண்ட ஸீ ஷெல் sea shell உணவகம், தமிழகம், கேரளாவில் பல கிளைகளை கொண்டு இயங்கி வருகிறது. இந்த உணவகங்களில் அரேபிய உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் அண்ணாநகர், வேளச்சேரி, கொட்டிவாக்கம் உள்ளிட்ட 5 இடங்களில் ஸீ ஷெல் உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரி ஏய்ப்பு நடப்பதாக வருமான வரித்துறைக்கு புகார்கள் சென்றன.
அதன் அடிப்படையில், சென்னையில் அண்ணா நகர், வேளச்சேரி, கொட்டிவாக்கம் ஆகிய இடங்களில் உள்ள ஸீ ஷெல் உணவகத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ஆழ்வார்பேட்டை பின்னி சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள நடிகர் ஆர்யாவின் வீட்டிலும் ஐடி சோதனை நடந்தது. ஸீ ஷெல் ஓட்டல்கள் மற்றும் அது தொடர்பான இடங்கள், ஆர்யாவின் வீடு என, சென்னையில் கிட்டத்தட்ட 10 இடங்களில் ஒரே நேரத்தில் ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
ஸீ ஷெல் ஓட்டலிலும் ஆர்யா வீட்டிலும் ஒரே நேரத்தில் சோதனை நடந்ததால், ஸீ ஷெல் ஓட்டல்கள் ஆர்யாவுக்குதான் சொந்தமானது என தகவல் பரவியது. ஆனால், அது தனக்கு சொந்தமானது அல்ல; அதை வேறொருவர் நடத்தி வருகிறார் என ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். ஸீ ஷெல் ஓட்டல்களை கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் குன்ஹி மூசா நடத்தி வருகிறார். இவர், மத்திய கிழக்கு நாடுகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக வசித்தார். அப்போது, அரபு நாட்டு உணவு வகைகளின் சுவையில் அவர் சொக்கிப் போனார். இதனால் அந்த உணவுகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் நோக்குடன் ஸீ ஷெல் உணவகங்களை கேரளா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் துவங்கினார். கேரளாவில் அவரது ஓட்டல்களில் செய்யப்பட்ட முதலீடுகளில் முறைகேடு நடந்துள்ளதாகவும், வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும் புகார்கள் வந்ததை அடுத்து திருவனந்தபுரத்தைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாகத்தான் சென்னையிலுளள ஸீ ஷெல் ஓட்டல்களிலும் சோதனை நடத்தப்பட்டதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதில் இன்டரஸ்டிங்ஆன விஷயம் என்னவென்றால், நடிகர் ஆர்யாவும் கேரளாவைச் சேர்ந்தவர்தான். அண்ணாநகரில் உள்ள ஸீ ஷெல் உணவகத்தை நடிகர் ஆர்யாதான் முதலில் நடத்தி வந்துள்ளார். ஆனால், அதையும் குன்ஹி மூசாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன் விற்று விட்டார் என கூறப்படுகிறது. சோதனையின் முடிவில்தான் கணக்கில் வராத எவ்வளவு பணம், ஆவணங்கள் சிக்கின என்ற விவரங்களை கூற முடியும் என வருமான வரி அதிகாரிகள் கூறினர்.