குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டனுக்கு கடந்த 12ம் தேதி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ரமேஷ் விஷ்வாஸ் குமார் என்ற பயணி மட்டும் பிழைத்தார். எஞ்சிய 241 பேர் இறந்தனர். மேலும் விமானம் விழுந்து நொருங்கிய மருத்துவ கல்லுரியை சேர்ந்த மாணவர்கள், ஊழியர்கள் என 38 பேர் இறந்தனர். விபத்தின்போது விமானம் தீப்பிடித்து எரிந்ததால், இறந்தவர்களை அடையாளம் காண முடியாமல் உடல் உருக்குலைந்தது. இதனால் அவர்களை அடையாளம் காண, டி.என்.ஏ., எனப்படும், மரபணு சோதனை நடத்தப்பட்டது.
இதில் அடையாளம் நூற்றுக்கு மேற்பட்டவர்களின் உடல் குஜராத், மஹாராஷ்டிரா, பீஹார், ராஜஸ்தான் மற்றும் டையு பகுதிகளை சேர்ந்த உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இப்போது விமான விபத்து நடந்த இடத்தில் கட்டுமான தொழிலதிபர் ராஜு படேல் தலைமையிலான குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இறந்த பயணிகளின் விலை உயர்ந்த பொருட்களை தேடும் பணியில் படேல் குழுவினர் ஈடுபட்டனர். இதில் 100 சவரன் அளவுள்ள கிட்டதட்ட 800 கிராமுக்கும் மேற்பட்ட தங்க நகைகள், 80 ஆயிரம் ரொக்கம், பாஸ்போர்ட்கள், பகவத்கீதை புத்தகம் மீட்கப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட அனைத்து உடைமைகளும் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. உறவினர்களிடம் விரைவில் திருப்பித் தரப்படும் என்றும் உள்துறை இணை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார். இதே ராஜு படேல் தலைமையிலான குழு தான் ஆமதாபாத்தில் கடந்த 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பின் போதும் மீட்பு பணியில் ஈடுபட்டது.