Tamilnadu News

விமானம் மீது லேசர் லைட் அட்டாக்


விமானம் மீது லேசர் லைட் அட்டாக்

புனேயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், 178 பயணிகளுடன் இன்று அதிகாலை சென்னை வந்தது. அதிகாலை 1.10 மணியளவில் சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்க விமானம் பறக்கும் உயரத்தை படிப்படியாக குறைத்து தாழ்வாக பறந்து கொண்டு இருந்தது. அப்போது கிண்டியில் இருந்து சக்தி வாய்ந்த லேசர் லைட் விமானம் மீது அடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விமானிகள், சுதாகரித்துக் கொண்டு உடனடியாக தாழ பறந்து கொண்டிருந்த விமானத்தை மீண்டும் அதிக உயரத்துக்கு கொண்டு சென்றனர்.


இதுதொடர்பாக சென்னை ஏர்போர்ட் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஏர்போர்ட் போலீஸ் மற்றும் சிவில் ஏவியேசன் செக்யூரிட்டி அலுவலகத்துக்கும் அவசர தகவல் கொடுத்தனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்குள் லேசர் லைட் அடுத்த சில வினாடிகளில் மறைந்து விட்டது. அதன்பிறகு 10 நிமிடம் தாமதமாக அதிகாலை 1.20 மணிக்கு விமானம் பத்திரமாக சென்னை ஏர்போர்ட்டில் தரையிறக்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த ஏர்போர்ட் போலீசார், பரங்கிமலை, கிண்டி போலீசாரின் உதவியை நாடியுள்ளனர். அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து, குறிப்பிட்ட அந்த நேரத்தில் லேசர் லைட் எங்கிருந்து அடிக்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


கடந்த சில நாட்களாகவே சென்னை ஏர்போர்ட்டில் தரையிறங்கும் விமானங்கள் மீது லேசர் லைட் அடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. 2 வாரத்தில் மட்டும் 3வது முறையாக நடந்த சம்பவம், சென்னை ஏர்போர்ட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விமானங்கள் டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் போன்ற முக்கியமான நேரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடப்பது மிகவும் ஆபத்தானது.  லேசர் ஒளி ஒரு கணம் விமானியின் கவனத்தை சிதறடித்தாலும், அது விபரீத விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். சென்னையில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் விமான போக்குவரத்து அதிகாரிகள், பாதுகாப்பு நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.


2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் அடிக்கடி நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் லேசர் லைட் அடித்து, சமூக விரோத கும்பல், விமானங்கள் தரையிறங்கும் நேரத்தில் இடையூறு செய்து வந்தனர். விமான நிலைய அதிகாரிகளும், போலீசாரும் எடுத்த கடும் நடவடிக்கைகயால் அவை கட்டுப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

For more details and updates, visit Thagavalulagam regularly!