சென்னைக்கு மிக அருகில், ஏர்போர்ட் 10 நிமிடத்தில், 100க்கும் அதிகமான வசதிகள் என ஏராளமான ரியல் எஸ்டேட் விளம்பரங்களை பார்த்திருப்போம். அதில் சிலர், நிபந்தனைகளுக்கு உட்பட்டது என கவர்ச்சியான விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றி வந்ததாக கூறப்பட்டது. இது போன்ற போலி அறிவிப்புகளை கட்டுப்படுத்தும் வண்ணம் இப்போது ஸ்ட்ரிக்ட் ஆக்சன் எடுக்கப்பட்டு உள்ளது. கவா்ச்சி வாசகங்களுடன் விளம்பரம் செய்ய தடை விதித்து தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை குழுமம் (TNRERA) எச்சரித்துள்ளது.
இதுதொடா்பாக RERA வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; மனை மற்றும் கட்டட விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதன் அமைவிடத்தை சரியாக குறிப்பிடாமல் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 100க்கும் மேற்பட்ட வசதிகள் , நிபந்தனைகளுக்கு உட்பட்டது என கவா்ச்சி வாசகங்களுடன் விளம்பரம் செய்ய கூடாது.
விற்பனையாளா்களின் பெயா், முகவரி, தொடா்பு எண்களைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். எந்த இடத்தில் மனை உள்ளதோ அந்த இடத்தை துல்லியமாக சொல்ல வேண்டும். அருகில் உள்ள பிரபலமான இடத்தை குறிப்பிட விரும்பினால், அந்த இடத்துக்கும், மனை அமைந்துள்ள பகுதிக்கும் இடையேயான தொலைவைக் குறிப்பிடலாம். மனை அமைந்துள்ள பகுதியிலிருந்து பிற இடங்களுக்கு இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தக் கூடாது.
என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை விரிவாகவும், தெளிவாகவும் குறிப்பிட வேண்டும். நாளிதழ் விளம்பரங்களில் RERA வழங்கி உள்ள பதிவு எண், க்யூ ஆா் கோடு, இணையதள முகவரி அச்சிடுவது கட்டாயம். துண்டுப் பிரசுரங்கள், டிவி விளம்பரங்கள், சமூக வலைதள விளம்பரங்கள் என அனைத்திலும் இதை பின்பற்ற வேண்டும். இந்த விதிகளுக்கு உடன்படாமல் விளம்பரங்களை வெளியிட்டால் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மற்றும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டு உள்ளது.
ரியல் எஸ்டேட் தொடர்பான சிறப்பு தொகுப்பு மற்றும் விமர்சனங்கள் நமது தினமலர் கனவு இல்லம் பகுதியில் வெளிவந்து கொண்டு இருக்கிறது. RERAவின் இந்த விதிகளுக்கு முன்பாகவே சரியான தகவல்களை எந்த மிகைப்படுதலும் இல்லாமல் தெரிவித்து வருகிறோம்.