கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது இன்று காலை மயிலாடுதுறை நோக்கி சென்ற பயணிகள் ரயில் மோதியது. இந்த கோர விபத்தில் 50 மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்ட பள்ளி வேன் சுக்கு நூறாக நொறுங்கியது. வேனுக்குள் இருந்த 4 மாணவர்களில் 6ம் வகுப்பு படிக்கும் தொண்டமாநத்தத்தை சேர்ந்த நிவாஸ் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தான்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட ஒரு மாணவி உட்பட 3 மாணவர்கள், டிரைவர், முதியவர் என 5 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சுப்பிரமணியபுரம் சின்ன காட்டு சாகையை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி சாருமதி இறந்தார். 10ம் வகுப்பு படிக்கும் செழியன், விஷ்வேஸ் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அதில் செழியன் இறந்துவிட்டதால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. மற்றொரு மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3வதாக இறந்த மாணவன் செழியன், ஏற்கனவே இறந்த சின்ன காட்டு சாகையை சேர்ந்த சாருமதியின் தம்பி என்பது உறுதியாகி உள்ளது.
மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள இந்த ரயில் விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த அக்கா – தம்பி இறந்திருப்பது மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. செம்மங்குப்பத்தில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க ஒரு வருடமாக கலெக்டர் அனுமதி கொடுக்கவில்லை என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது. சுரங்கப்பாதை அமைக்க ரயில்வே தரப்பில் நிதி ஒதுக்கீடு செய்தும் அனுமதி தரவில்லை என குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக கடலூர் கலெக்டர் ஆதித்யா செந்தில் குமாரிடம் கேட்டபோது, நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சி துறையிடம் தரவுகள் கேட்டுள்ளேன். முழு விவரங்கள் கிடைத்தவுடன் உரிய பதில் தரப்படும். ரயில்வே அளித்த அறிக்கையை முழுமையாக பார்த்துவிட்டு விளக்கம் அளிக்கப்படும் எனவும் கலெக்டர் செந்தில்குமார் கூறியுள்ளார்.