தமிழகத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள திமுகவின் பி.வில்சன், சண்முகம், புதுக்கோட்டை அப்துல்லா, அதிமுகவின் சந்திரசேகரன், மதிமுக வைகோ மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பதவிக் காலம் வரும் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக ராஜ்யசபா தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடக்க உள்ளது. இதற்கான மனு தாக்கல் ஜூன் 2ல் தொடங்கியது. திமுகவில் வக்கீல் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம் ஆகியோரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு ஜூன் 6ம் தேதி மனு தாக்கல் செய்தனர். திமுக கூட்டணியான மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் மனு தாக்கல் செய்தார்.
அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட இன்பதுரை, தனபால் ஆகியோரும் மனுக்களை தாக்கல் செய்தனர். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மனு தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவு பெற்றது. வேட்புமனு பரிசீலனை நாளை நடைபெறவுள்ளது. ஜூன் 12ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாகும். ராஜ்ய சபா தேர்தலுக்காக மொத்தம் 13 பேர் 17 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். திமுக தரப்பில் இருந்து வேட்புமனு நிராகரிக்கப்படாமல் இருக்க ஏதுவாக ஒவ்வொரு வேட்பாளரும் தலா இரண்டு வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
ராஜ்யசபா உறுப்பினரை தேர்வு செய்ய 34 வேட்பாளர்களின் ஆதரவு தேவை. அதன்படி, சட்டமன்ற பலத்தின் அடிப்படையில் திமுக 4 உறுப்பினர்களையும், அதிமுக 2 உறுப்பினர்களையும் தேர்வு செய்யும் நிலை உள்ளது. எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இல்லாத காரணத்தால் நாளை வேட்புமனு பரிசீலனையின் போது சுயேச்சை வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்படும். மற்ற 6 உறுப்பினர்களும் போட்டியின்றி தேர்வாகவே அதிக வாய்ப்புகள் உள்ளன.