Cinema News

நயன்தாரா ஆவணப்படத்திற்கு மீண்டும் சிக்கல்


நயன்தாரா ஆவணப்படத்திற்கு மீண்டும் சிக்கல்

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சி மற்றும் அவர்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை, டார்க் ஸ்டூடியோ நிறுவனம் ஆவணப்படமாக தயாரித்தது. இந்த ஆவணப்படம், கடந்த ஆண்டு நவம்பரில், 'நெட் பிளிக்ஸ்' ஓ.டி.டி., தளத்தில் வெளியானது.


இதில் நடிகர் தனுஷ் நிறுவனமான 'வொண்டர்பார் பிலிம்ஸ்' தயாரித்த 'நானும் ரவுடி தான்' படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. தன் அனுமதி பெறாமல் நானும் ரவுடி தான் படக் காட்சிகளை பயன்படுத்தியதாக நடிகர் தனுஷ், 10 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இதற்கிடையே அதே ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சில காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளதாக, ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க கோரி, 'சந்திரமுகி' படத்தின் பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.


மனுவில், 'ஆவணப்படத்தில் சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். அவற்றை நீக்க உத்தரவிட வேண்டும். ஆவணப்படம் வாயிலாக ஈட்டிய, லாப கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.


இதனை விசாரித்த நீதிமன்றம், ஆவண பட தயாரிப்பு நிறுவனமான டார்க் ஸ்டூடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

For more details and updates, visit Thagavalulagam regularly!