போதைப் பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கடந்த மாதம் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களது ஜாமின் மனுவை போதை பொருள் கடத்தல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால், ஐகோர்ட்டில் முறையிட்டனர். நீதிபதி நிர்மல்குமார் நேற்று விசாரித்தார்.
ஸ்ரீகாந்த் வக்கீல் வாதிடும்போது, போதை பொருள் பயன்படுத்தியதை ஸ்ரீகாந்த் ஒப்புக்கொண்டதாகவும், இனி இது போன்ற தவறான செயலில் ஈடுபட மாட்டார் எனவும் தெரிவித்தார். நடிகர் கிருஷ்ணாவின் வக்கீல் வாதிடும்போது, கிருஷ்ணா செய்யப்பட்டதற்கான காரணத்தை போலீசார் தெரிவிக்கவில்லை; மருத்துவ பரிசோதனையில்கூட அவர் போதை பொருள் பயன்படுத்தியது நிரூபிக்கப்படவில்லை என வாதிட்டார்.
அனைத் தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி நிர்மல்குமார் தீர்ப்பை ஒத்தி வைத்தார். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா இருவருக்கும் நிபந்தனை ஜாமின் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இருவரும் 2 வாரங்களுக்கு வழக்கு விசாரணை அதிகாரி முன்பு தினமும் ஆஜராக வேண்டும். பத்தாயிரம் ரூபாய்க்கு ஜாமின் பத்திரம் அளிக்க உத்தரவிட்டார். புகார் அளித்தவர் அல்லது சாட்சிகளை அச்சுறுத்த கூடாது என நடிகர்களுக்கு அறிவுறுத்தினார். நிபந்தனைகளை மீறினால் ஜாமின் ரத்து செய்யப்படும்.
ஜாமின் காலத்தில் தலைமறைவானால் புதிய எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்றும் நீதிபதி அவர்களை எச்சரித்தார்.