பெங்களூருவில் நடைபெற்ற RCB கிரிக்கெட் அணியின் ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். கிரிக்கெட் வீரர்களை பார்க்கும் கட்டுக்கடங்காத ரசிகர்கள் சின்னசாமி ஸ்டேடியம் முன் ஒரே நேரத்தில் குவிந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கர்நாடகா அரசு தெரிவித்தது. இந்த சம்பவத்தை பெங்களூரு ஐகோர்ட் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த சம்பவத்துக்கு என்ன கரணம்? எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுப்பது தொடர்பாக விளக்கம் கேட்டு கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. கூட்ட நெரிசல் தொடர்பான விசாணை சிஐடிக்குCID மாற்றப்பட்டு உள்ளதாகவும், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு இன்னும் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கூட்ட நெரிசல் சம்பவத்தை கையாண்ட விதம் தொடர்பாக கர்நாடக அரசை கண்டித்த ஐகோர்ட், அது தொடர்பாக அரசுக்கு 9 கேள்விகளை கேட்டுள்ளது.
1. வெற்றிக் கொண்டாட்டத்தை எப்போது, யார், எந்த முறையில் நடத்த முடிவு செய்தார்கள்?
2. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
3. பொதுமக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
4. அந்த இடத்தில் எந்த மாதிரியான மருத்துவம் மற்றும் பிற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன?
5. கொண்டாட்டத்தின் போது எத்தனை பேர் இருக்கக்கூடும் என்பது குறித்து முன்கூட்டியே மதிப்பீடு செய்யப்பட்டதா?
6. காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதா? இல்லையென்றால், ஏன்?
7. காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல எவ்வளவு நேரம் ஆனது?
8. இதுபோன்ற எந்தவொரு விளையாட்டு நிகழ்வு அல்லது கொண்டாட்டத்திலும் 50,000 மற்றும் அதற்கு மேற்பட்ட கூட்டத்தை நிர்வகிக்க ஏதேனும் SOP எனப்படும் நிலையான இயக்க நடைமுறை வகுக்கப்பட்டுள்ளதா?
9. இந்த நிகழ்வை ஏற்பாடு செய்ய ஏதேனும் அனுமதி கோரப்பட்டதா?
ஆகிய கேள்விகளை பெங்களூரு ஐகோர்ட் கேட்டது. இதற்கு பதில் அளிக்க கர்நாடகா அரசு கால அவகாசம் கேட்டது. இதையடுத்து வழக்கு அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.