குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து 242 பயணிகளுடன் லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. ஓடு தளத்தில் இருந்து மேல் எழுந்து சில நிமிடங்கள் பறந்த விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. தீ அணைப்பு துறையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் இதுவரை 170 பேர் இறந்திருப்பது உறுதியாகி உள்ளது. காயம் பட்டவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. விமானத்தில் 169 இந்தியர்கள், பிரிட்டனைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகல்லை சேர்ந்த 7 பேர், கனடாவை சேர்ந்த ஒருவரும் பயணம் செய்தனர்.
குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் இந்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த விஜய் ரூபானி 1971ல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பின்னர் அரசியலுக்கு வந்தார். 2016 முதல் 2021 வரை அவர் குஜராத் முதல்வராக பதவி வகித்தார். விஜய் ரூபானிக்கு அஞ்சலி என்ற மனைவியும், ருஷாப் என்ற மகனும், ராதிகா என்ற மகளும் உள்ளனர்.
இவருடைய இளைய மகன் பூஜித் சாலை விபத்தில் இறந்தார். அவரது நினைவாக அறக்கட்டளை தொடங்கி ஏழைகளுக்கு விஜய் ரூபானி உதவி வந்தார். விமான விபத்தில் விஜய் ரூபானி இறந்த செய்தி குஜராத் மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.