குஜராத்தின் ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து நாட்டையே உலுக்கிப்போட்டுள்ளது. ஆமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டனின் கேட்விக் ஏர்போர்ட்டுக்கு 242 பேருடன் புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் தரையில் விழுந்து வெடித்தது.
விமானம் வெடித்த சில நொடிகளில் சாம்பலாகி விட்டது. சம்பவ இடத்தில் இருந்து கொத்து கொத்தாக சடலங்கள் மீட்கப்பட்டன. 242 பேரில் எத்தனை பேர் மரணம் அடைந்தனர் என்ற முழு விவரம் இன்னும் வெளியாகவில்லை. விமான விபத்துக்கான காரணம் குறித்து வான் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். விபத்துக்குள்ளான ஏர் இண்டியா ஏ171 விமானம், அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனத்தின் தயாரிப்பாகும். அது Boeing 787-8 Dreamliner ரகத்தை சேர்ந்தது. சரியாக மதியம் 1:38 மணிக்கு 23வது ரன்வேயில் இருந்து டேக் ஆப் ஆனது. அடுத்த சில நிமிடங்களில் விமானம் ஆபத்தில் சிக்கியது. உடனே மேடே அலர்ட்டை கோ-பைலட் கொடுத்தார். வான் கட்டுப்பாட்டு மையம் மற்றும் பயணிகளை உஷார்படுத்தும் விதமாக ‛மேடே மேடே’ என்று அவர் அறிவித்தார். உடனே வான் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள் உஷாரானார்கள். விமானத்தில் என்ன பிரச்னை என்பதை ஆராய முயற்பட்டனர். ஆனால் மேடே அலர்ட் வந்த சில நொடிகளில் விமானம் தொடர்பை இழந்தது. பைலட்களையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்த நேரத்தில் தான் விமானம் தரையில் மோதி வெடித்து இருக்க வேண்டும். ரன்வேயில் இருந்து டேக் ஆப் ஆன அடுத்த 5 நிமிடத்தில் விமானம் வெடித்து விட்டது. அதாவது, மதியம் 1:43 நிமிடத்துக்கு விமானம் விபத்தில் சிக்கி இருக்கிறது. விமானம் டேக் ஆப் ஆகும் போதே அசம்பாவிதம் நடந்து இருப்பதும் தெரியவந்துள்ளது. அதாவது, தரையில் இருந்து 825 அடி உயரம் தான் அதிகபட்சமாக விமானம் பறந்து இருந்தது. அவ்வளவு உயரத்தை எட்டியதும் அவசரமாக தரையிறங்க வேண்டிய நிலை வந்து இருக்கிறது.
இந்த விமான விபத்தோடு சேர்ந்து இன்னொரு துயரமும் நடந்து இருக்கிறது. அதாவது, விமானம் விழுந்து வெடித்த இடம் மருத்துவ கல்லூரிக்கான விடுதி. அதில் மருத்து கல்லூரியை சேர்ந்த நிறைய டாக்டர்கள் தங்கி இருந்தனர். அதில் பலரும் பலத்த காயம் அடைந்துள்ளனர். எனவே பலி எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. பறவை மோதி விபத்து நடந்ததா அல்லது வேறு எதுவும் அசம்பாவிதம் நடந்ததா என்பது உடனடியாக தெரியவரவில்லை. உண்மையில், விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பதில் இப்போது வரை மர்மம் நீடிக்கிறது.