நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல் கேட் வழியாக செல்லும் வாகனங்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் ஸ்டிக்கர் கட்டாயம். பாஸ் டேக் இல்லாத வாகனங்களுக்கு இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும். சுங்கச்சாவடிகளை அடிக்கடி பயன்படுத்தும் 4 சக்கர வாகனங்களுக்காக மலிவு விலையிலான பாஸ்டேக் ஆண்டு சந்தா திட்டத்தை மத்திய நெடுஞ்சாலை துறை அறிமுகம் செய்ய உள்ளது. ஆகஸ்ட் 15 முதல் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது. ஆண்டுக்கு 3000 ரூபாய் கட்டணம் செலுத்தினால் போதும். ஓராண்டில் 200 சுங்க சாவடிகளை கடந்து செல்ல முடியும்.
கார், ஜீப், வேன் போன்ற தனி நபர்கள் வாகனங்களுக்கு மட்டுமே இந்த பாஸ். கமர்ஷியல் வாகனங்களுக்கு பொருந்தாது. தற்போது ஒவ்வொரு சுங்க சவடியிலும் ஒவ்வொரு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 3000 ரூபாய்க்கு வருடாந்திர பாஸ் ரீசார்ஜ் செய்து விட்டால், 200 முறை டோல்கேட்களை கடக்கலாம். எந்த சுங்கசவடியை கடந்தாலும் ஒரே மாதிரியாக 15 ரூபாய்தான் செலவாகும். இந்த கட்டணம் மிகக்குறைவு என்பதால், வாகன உரிமையாளர்களுக்கு மிகவும் லாபகரமானதாக இருக்கும்.
ஓராண்டுக்குள் 200 முறை டோல்கேட்களை கடந்து விட்டாலோ அல்லது ஓராண்டு முடிந்து விட்டாலோ பாஸ் காலாவதி ஆகிவிடும். ராஜ்மார்க் யாத்ரா செயலி, மற்றும் NHAI, MoRTH ஆகிய வெட்சைட்களில் இந்த பாஸ் வாங்கி கொள்ள முடியும். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் நிதின் கட்கரி தமது பதிவில், 60 கிலோ மீட்டருக்குள் உள்ள சுங்கச்சாவடிகளில் மீண்டும், மீண்டும் கட்டணம் செலுத்த வேண்டிய பிரச்னைக்கு இதன் மூலம் தீர்வு கிடைக்கும்.
காத்திருக்கும் நேரம், போக்குவரத்து நெரிசலை குறைப்பதன் மூலமும், சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தகராறுகளை நீக்குவதன் மூலமும் கோடிக்கணக்கான தனியார் வாகன உரிமையாளர்களுக்கு விரைவான மற்றும் சிறந்த பயண அனுபவத்தை வழங்க முடியும் என நிதின் கட்கரி கூறியுள்ளார்.