திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்துடன் திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர் கோயிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர், தரிகொண்டாவில் அமைந்துள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்திற்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், தனது குடும்பத்தினருடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தற்போது, பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல், அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றார்.
மேலும், நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் இந்த கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பல பக்தர்கள் விரும்புகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். திருமலையின் ஏழுமலை பகுதிக்கு அருகில் வணிக நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது. மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்பு வழங்கப்பட்ட அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது எனக்கூறினார்.
சந்திரபாபு நாயுடுவின் இந்த அறிவிப்பு, பக்தர்களிடையே பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை வரவேற்றாலும், மற்றவர்கள் இதை மதச்சார்பின்மைக்கு எதிரான நடவடிக்கையாக பார்க்கின்றனர். எனினும், கோயிலின் பாரம்பரியத்தை மற்றும் புனிதத்தன்மையை பேணுவதற்கான இந்த முயற்சிகள், எதிர்காலத்தில் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை காலமே தீர்மானிக்கும்.