தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நாளை (மார்ச் 28) சென்னையில் திருவான்மியூரில் நடைபெற உள்ளது. காலை 10 மணிக்கு தொடங்கும் கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 2,150 பேர் பங்கேற்க உள்ளனர்.
கட்சியின் விதிமுறைகளின்படி, பொதுக்குழு கூட்டத்திற்கான தேதி 15 நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு, உறுப்பினர்களுக்கு மின்னஞ்சல், வாட்ஸ்அப் மற்றும் தபால் மூலம் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், அரசாணைகள், அரசு ஊழியர்கள் போராட்டம், இருமொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், கட்சியின் வளர்ச்சி மற்றும் ஒழுங்கமைப்பை தீவிரப்படுத்துவது குறித்து விஜய் ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாவட்ட செயலாளர்கள் தங்களது பகுதிகளில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை விஜய் வழங்குவார் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜய் தனது சுற்றுப்பயணம் குறித்த அறிவிப்பை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது கடைசி திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்துடன் முடிவடைவதால், அதன்பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ஒரு அறிவிப்பும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடம்பெறலாம்.
தவெக கட்சியின் முதல் மாநில மாநாடு கடந்த அக்டோபர் மாதம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றிருந்தது. கடந்த மாதம் தவெக கட்சியின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இப்போது, முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதால், பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்படலாம்.
விஜய், முந்தைய கூட்டங்களில் ஆளும் திமுக அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த கூட்டத்திலும் அவர் திமுக அரசின் செயல்பாடுகள், மாநிலத்தின் நிலைமைகள், பெண்கள் பாதுகாப்பு, அதிகரிக்கும் குற்றச் செயல்கள் போன்றவை குறித்து தனது கருத்துக்களை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக, வரவேற்பு குழு, மேடை மற்றும் உள்ளரங்க மேலாண்மை குழு, தொழில்நுட்ப குழு உள்ளிட்ட ஐந்து குழுக்கள் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பொதுக்குழுவிற்கான ஏற்பாடுகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளன. இதனுடன், நாளை கூட்டத்தில் பங்கேற்கும் தவெக நிர்வாகிகளுக்கு பாரம்பரிய தலை வாழை இலையில் விருந்து அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மொத்தத்தில், இந்த பொதுக்குழு கூட்டம், தவெக கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை தீர்மானிக்கச் செல்லும் முக்கிய நிகழ்வாக அமைவுள்ளதாகக் கூறப்படுகிறது.