World News

மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்


மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரில் இன்று அதிகாலை 7.7 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் காரணமாக இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 43 பேர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பல கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நிலநடுக்கம் பல நாடுகளில் உணரப்பட்டது

இந்த நிலநடுக்கம் இந்தியாவின் மேற்கு வங்காளம், மணிப்பூர், அசாம், நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் உணரப்பட்டது. கொல்கத்தா மற்றும் இம்பாலில் மக்கள் அலறியடித்து வீடுகளை விட்டு வெளியேறினர். வங்கதேசத்தின் தலைநகர் டாக்கா மற்றும் சட்டோகிராமிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளது. அதேசமயம், சீனாவின் யுன்னான் மாகாணத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

பாங்காக்கில் அவசரநிலை அறிவிப்பு

மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிலும் கடுமையாக உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன, மக்கள் பரபரப்புடன் வெளியேறினர். நிலைமை சீராகும் வரை பாங்காக்கில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்க பாதிப்புகளால் ரயில் மற்றும் விமானச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், நிலநடுக்கம் தொடர்பாக ஒரு அவசர எணை அறிவித்துள்ளது. அங்கு உள்ள இந்தியர்கள் +66 618819218 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். இதுவரை எந்த இந்தியர்களுக்கும் எந்தவொரு அசம்பாவிதமும் நேரவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி கவலை

மியான்மர், தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார். நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்காக பிரார்த்திப்பதாகவும், இந்தியா தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக பிரதமர் மோடியின் அடுத்த வாரம் திட்டமிடப்பட்ட தாய்லாந்து அரசு பயணம் ரத்து செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மியான்மர், தாய்லாந்து, வங்கதேசம், சீனா உள்ளிட்ட நாடுகளில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. மீட்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

For more details and updates, visit Thagavalulagam regularly!