தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது முதல் பொதுக்குழு கூட்டத்தை இன்று (மார்ச் 28) சென்னை திருவான்மியூரில் நடத்தியது. இதில் கட்சித் தலைவர் விஜய், கட்சித் தொண்டர்கள், முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்ட 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் விஜய், முதல் முறையாக நேரடியாக பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ்நாடு என்றாலே அலர்ஜியா மோடி?"
கூட்டத்தில் உரையாற்றிய விஜய், "தமிழ்நாடு மக்களுக்கு எதிரான திட்டங்களை மட்டுமே ஏன் செயல்படுத்துகிறீர்கள் ஜி? இதெல்லாம் நியாயமா? தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி மட்டும் வேண்டும். ஆனால், எங்களுக்கான வரி பகிர்வை மட்டும் தர மாட்டேன் என்பீர்களா?" என பிரதமர் மோடியை கடுமையாக கேட்டுக்கொண்டார். மேலும், "தமிழ்நாட்டை கொஞ்சம் கவனமாக நடத்துங்கள். பல பேருக்கு தண்ணி காட்டின ஸ்டேட் இது என்று கூறினார்.
"முதல்வர் ஸ்டாலினின் பெயரில் மட்டும் வீராப்பு வேண்டாம்"
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரடியாக விமர்சித்த விஜய், "மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களை! ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். மக்கள் விரோத ஆட்சியை மன்னர் ஆட்சி போல நடத்துகிறார்கள்" என்று குற்றம்சாட்டினார். மேலும், "முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என பெயரை மட்டும் வீராப்பாகச் சொன்னால் போதாது, அது செயலில் இருக்க வேண்டும்" என்றார்.
"திமுகவின் சீக்ரெட் முதலாளி பாஜக"
திமுகவையும், பாஜகவையும் ஒரே பெயரில் விமர்சித்த விஜய், "திமுகவின் சீக்ரெட் முதலாளி பாஜக தான். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு இருப்பதாகவே தெரியவில்லை. இதற்குக் காரணம் இந்த ஊழல் கும்பலின் ஆட்சிதான்" என்றார். மேலும், "நம் கட்சியின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் முடக்க முயல்கிறார்கள். மக்கள் விரோத நடவடிக்கைகள் திமுக அரசின் அடையாளமாகிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.
"பெயரில் மட்டும் வீராப்பு வேண்டாம், செயலில் காட்டுங்கள்"
பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசும் போது, விஜய், "உங்களை அப்பா என அழைப்பதாக சொல்கிறீர்கள். ஆனால், அந்த பெண்களுக்கு நீங்கள் பாதுகாப்பு உறுதிசெய்ய தவறிவிட்டீர்கள். எந்தப் பெண்கள் பாதுகாப்பு உறுதிசெய்ய தவறினீர்களோ, அந்த பெண்கள் சக்தி தான் உங்களை ஆட்சியில் இருந்து அகற்ற போகிறது" என்று கடுமையாக எச்சரித்தார்.
"2026 சட்டமன்ற தேர்தல் - திமுக vs தவெக"
விஜய் தனது பேச்சின் முடிவில், "வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையே போட்டி. நாங்கள் தமிழகத்தை மாற்றுவோம். அதிகார பகிர்வு, பெண்கள் பாதுகாப்பு 100% உறுதி செய்யப்படும். புதிய வரலாற்றை படைக்க தயாராகுங்கள்!" என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.