Political News

விஜய் இனி வெற்றித்தலைவர்


விஜய் இனி வெற்றித்தலைவர்

சென்னை திருவான்மியூரில் இன்று (மார்ச் 28) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் இனி "தளபதி" அல்ல, "வெற்றி தலைவர்" என அழைக்கப்படுவார் என்று ஆதவ் அர்ஜுனா அறிவித்தார். 

தவெக தேர்தல் போருக்குத் தயாராகிறது

ஆதவ் அர்ஜுனா தவெக பொதுக்கூட்டத்தில் உரையாற்றும்போது, "எம்ஜிஆர் எந்த தீய சக்தியை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ, அதே இடத்திலிருந்து நாமும் தொடங்கியுள்ளோம். ஊழல் அரசியலை ஒழிக்க தேர்தலுக்குத் தயாராகிவிட்டோம்" என்று கூறினார். மேலும், "ஊழல் அமைச்சர்களையும், ஊழல் குடும்பத்தையும் தூக்கி எறிய தயாராக உள்ளோம்" என்று அவர் உறுதி அளித்தார்.

அண்ணா பல்கலைக்கழகம் விவகாரம்

தமிழக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, "அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில், மாநில அரசு அதை மூட முயன்றது. இது கல்வி அமைப்புகளின் மீது அச்சுறுத்தல் உருவாக்கும்" என்று தெரிவித்தார்.

மேலும், திமுகவை நேரடியாக விமர்சித்த அவர், "திமுக, எதிர்க்கட்சிகளை எவ்வாறு தேர்வு செய்வது என ஒரு புதிய நரேட்டிவ் உருவாக்க முயல்கிறது. பிரசாந்த் கிஷோர் வருகை தொடர்பாக திமுக பொய்ப் பிரசாரம் பரப்புகிறது. தேர்தல் வியூக நிறுவனங்களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை உடைப்பதற்கான பல்வேறு யோசனைகள் தீட்டப்பட்டு வருகின்றன" என்று குற்றம் சாட்டினார்.

பொதுக்குழு கூட்டத்தின் முக்கியத்துவம்

இக்கூட்டம், தவெகவின் முதலாவது பொதுக்குழு கூட்டம் என்பதால் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளுக்கான முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சித் திட்டங்கள், தேர்தல் ஆயத்தங்கள், புதிய உறுப்பினர் சேர்க்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன.

"இளைஞர்கள் கூட்டம் 2026-ல் புதிய முடிவெடுக்கும்"

தவெகவின் வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில், "அண்ணா திமுக உருவானபோது இளைஞர்களே முக்கிய பங்கு வகித்தனர். அது போலவே, 2026-ல் இளைஞர்கள் புதிய முடிவெடுப்பார்கள். தவெகவில் சாதி அரசியல் கிடையாது, ஆனால் திமுக சாதியை அடிப்படையாக வைத்து அரசியல் செய்கிறது" என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அண்ணாமலை குறித்து கருத்து தெரிவித்த அவர், "அண்ணாமலையை திமுக செட் செய்துள்ளது. அவருக்கு ஓய்வு அளிக்கத் தயாராகிவிட்டோம்" என்று கூறினார். மேலும், "அண்ணாவின் இலக்குகளை நிறைவேற்றும் ஒரே தலைவர் விஜய் தான்" என்று தெரிவித்துள்ளார்.

For more details and updates, visit Thagavalulagam regularly!