சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில், மனோஜ் உடல் தகனம் செய்யப்பட்டது. இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் மாரடைப்பால் நேற்று (மார்ச் 25) இரவு நீலாங்கரை இல்லத்தில் உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனோஜ் உடல் அவரது நீலாங்கரை இல்லத்தில் மக்கள் மற்றும் பிரபலங்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இயக்குநர்கள் கே. எஸ். ரவிக்குமார், பி. வாசு, பாண்டியராஜன், பேரரசு, தியாகராஜன், விக்ரமன், எழில் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சரத்குமார், நாசர், கவுண்டமணி, செந்தில், எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, ரோபோ சங்கர், பிரேம் குமார், பார்த்திபன், ஸ்நேகன் உள்ளிட்டோரும் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், மறைந்த மனோஜின் குடும்பத்தினருக்கும் ஆதரவு தெரிவித்தார். மேலும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, கனிமொழி, கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன், பிரேமலதா விஜயகாந்த், வி.கே. சசிகலா உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
சீமான், கவிஞர் வைரமுத்து ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது நீலாங்கரை இல்லத்தில் இருந்து நடந்தே வந்து, நண்பர் சஞ்சீவுடன் இணைந்து மனோஜுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இன்று மாலை பெசன்ட் நகர் மின் மயானத்திற்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் திரையுலகினர், அரசியல் தலைவர்கள், குடும்பத்தினர் மற்றும் ஏராளமான மக்கள் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இதேபோல், ரத்த புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கராத்தே வீரரும், நடிகருமான ஷிஹான் ஹூசைனி உடல், மதுரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.