டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த பிறகு, விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கே. பழனிசாமி, கூட்டணி குறித்து பேச தேவையில்லை என்றும், அது தேர்தல் நெருங்கும் போது தீர்மானிக்கப்படும் என்றும் கூறினார்.
தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் உள்ளது. எல்லோருமே தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி அமைப்பார்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களின் கொள்கை என்றுமே நிலையானது. கூட்டணி என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாறும். அதே நேரத்தில், அமித் ஷாவிடம் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததாக அவர் தெரிவித்தார்.
1.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட நிதி உடனடியாக தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.
2.தமிழ்நாட்டின் கல்வித் திட்ட நிதி நிலுவையில் உள்ளது; அதனை வழங்க நடவடிக்கை தேவை.
3.தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும்.
4.நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் செய்ய வேண்டும்.
5.கோதாவரி - காவேரி இணைப்பு திட்டம் விரைவாக செயல்படுத்த வேண்டும்.
6.நடந்தாய் வாழி காவேரி திட்ட நிதி உடனடியாக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
7.மேகதாட்டு அணை விவகாரத்தில், கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி செயல்பட மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
8.முல்லைப்பெரியாறு அணை நீர்மட்ட உயர்வு தொடர்பாக, தடையை நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
9.தமிழ்நாட்டில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும்.
10.டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, அமலாக்கத்துறை கூறியபடி, தவறிழைத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
11.தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு குறைபாடு, போதைப்பொருள் பரவல், பாலியல் குற்றங்கள் ஆகியவற்றுக்கு மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வைத்தாக கூறப்படுகிறது.
மக்களின் பிரச்சனைகளை முன்வைத்து அதனை தீர்ப்பதில் முனைப்பாக இருக்கும் கட்சியே அதிமுக. அரசியல் கூட்டணிகள் சூழ்நிலைக்கேற்ப அமையும். ஆனால், எங்கள் கொள்கையில் மாற்றமில்லை என்றும் அவர் கூறினார்.