தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் மார்ச் 25 வரை நடைபெற்றது. இந்த தேர்வில் மாநிலம் முழுவதும் 8,21,057 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர். இதில், 3,78,545 மாணவர்கள், 4,24,023 மாணவிகள், 18,344 தனித்தேர்வர்கள், 145 சிறை வாசிகள், மொத்தம் 7,518 பள்ளிகளிலிருந்து, 3,316 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்த பின்னர் மாணவர்கள் உற்சாகம்
இன்று (மார்ச் 25) இறுதி தேர்வு முடிந்ததையடுத்து, மாணவர்கள் இங்க் அடித்து, பள்ளிக் கால நினைவுகளோடு உற்சாகமாக பிரியாவிடை கொடுத்தனர்.
விடைத்தாள் பாதுகாப்பு மற்றும் திருத்தம்
மாணவர்கள் எழுதிய விடைத்தாள்கள் அந்தந்த மாவட்ட மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 26 முதல், தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 80+ விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு பிரித்து அனுப்பப்படும். விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் 4 முதல் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக அனுபவம் வாய்ந்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் முதன்மை திருத்துபவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதிப்பெண் பதிவு, தேர்வு முடிவுகள்
விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்பட்ட பிறகு, மாணவர்களின் மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்படும். பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக மே 9ஆம் தேதி தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளது.