Tamilnadu News

சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. அதிர்ச்சி


சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீச்சு.. அதிர்ச்சி

சென்னையைச் சேர்ந்த பிரபல யூடியூபர் மற்றும் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர், திமுக அரசை தொடர்ந்து விமர்சித்து வருபவர். அவர் திமுக அமைச்சர்கள், முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்டோரின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சித்து, அரசின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு வெளிச்சம் போடுவதில் முனைப்பாக இருக்கிறார். இதற்கிடையே, அவரது வீட்டில் மர்ம கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கொடூரமான தாக்குதல் – வீடு புகுந்த மர்ம நபர்கள்

இன்று காலை 9.30 மணியளவில், சவுக்கு சங்கர் வீட்டில் ஒரு பெரும் குழு புகுந்து தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 பேர் கொண்ட அந்த கும்பல், தூய்மை பணியாளர்களாக வந்து, வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்ததாகவும், சங்கரின் தாயாரை தாக்கியதுடன், அவரது செல்போனை பறித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், அந்தக் குழு வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியது மட்டுமல்லாது, படுக்கையறை, சமையல் அறை உள்ளிட்ட பகுதிகளில் சாக்கடை கழிவுகள் மற்றும் மலத்தை கொட்டியுள்ளனர்.

சவுக்கு சங்கர் இந்த சம்பவத்திற்கான வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிட்டதையடுத்து, இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையாக மாறியது. அவர், இது திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்றும், திமுக அரசின் தூண்டுதலினால் தான் இது நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த சம்பவத்திற்குப் பிறகு, காவல்துறை அவரை வீட்டிற்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தியதாகவும், அவருடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காவல்துறையின் செயல்பாடு – எதிர்கட்சிகளின் கண்டனம்


இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது வன்முறை நடப்பதாகவும், இதனை தமிழ்நாடு பாஜக கடுமையாகக் கண்டிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஒருவர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார்.அண்ணாமலை இதை ஆட்சியாளர்களின் அராஜக போக்காக வர்ணித்து, நாளை ஆட்சி மாற்றம் நடந்தவுடன், இந்த தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரித்தார்.


எடப்பாடி கண்டனம்


சவுக்கு சங்கர்வீட்டில் இன்று (24.3.2025) காலை, அவரது தாயார் தனியாக இருந்தபோது, 50 பேர் கொண்ட கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து சில பொருட்களை எடுத்துச் சென்றதுடன், படுக்கையறை, சமையல் அறை, சமையல் பொருட்கள் என்று அனைத்துப் பொருட்களின் மீதும் சாக்கடையையும், மலத்தையும் கொட்டி உள்ளார்கள் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கீழ்த்தரமான செயல் மற்றும் தாக்குதல் கண்டனத்திற்குரியது என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள யாரும் இது போன்ற சம்பவத்தை சகித்துக்கொள்ள மாட்டார்கள். உண்மையில் இந்தச் சம்பவம் கொடுமையின் உச்சம்; அராஜகத்தின் வெளிப்பாடு. சட்டத்தின் ஆட்சி நடக்கிறது என்று கூறிக்கொள்ளும் விடியா திமுக-வின் மாடல் ஆட்சியில் இப்படிப்பட்ட சம்பவம் நடந்தேறியது, மனசாட்சியுள்ள அனைவரும் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டிய ஒரு சம்பவமாகும்.  தூய்மைப் பணியாளர்கள் போர்வையில் இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள், பின்னணியில் உள்ளவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

For more details and updates, visit Thagavalulagam regularly!