விஜய் நடிப்பில் உருவாகும் 69ஆவது திரைப்படமான ஜனநாயகன் படப்பிடிப்பு இன்னும் 25 நாட்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நடிகர் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) என்ற அரசியல் கட்சியினை தொடங்கி, அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார் நடிகர் விஜய். தவெக கட்சியின் மாவட்ட, தொகுதி மற்றும் பூத் மட்ட அடிப்படை அமைப்புகளை வலுப்படுத்தும் பணிகளில் விஜய் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே, 120 மாவட்ட செயலாளர்களை நியமித்த விஜய், தற்போது ஆறாம் கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். மேலும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க, நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நேரில் மக்கள் சந்திப்பு நடத்த திட்டமிட்டுள்ள விஜய், இதன் மூலம் அவரது முழு நேர அரசியல் பயணத்திற்கு தயாராகியுள்ளார். கடந்த தேர்தல்களில் பாஜக, திமுக ஆகிய கட்சிகளுக்கு வியூகம் வகுத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர், தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் வியூக வகுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கூட்டணி பற்றி வெளிப்படையாக பேசிய விஜய், அவருடன் இணையும் கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கும் என அறிவித்துள்ளார். அதே நேரத்தில், தனித்துப் போட்டியிடவும் தயாராக உள்ளார்.
Work From Home விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி ?
நடிகர் விஜய், அரசியல் பயணத்திற்கான முக்கியமான தீர்மானங்களை வீட்டிலிருந்து எடுத்து வருகின்றார் என்பதால், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் அவரை விமர்சித்து வருகின்றனர். விஜய் எப்போது நேரில் மக்களை சந்திக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்து வரும் நிலையில், இன்னும் 25 நாட்கள் கழித்து அவர் முழுநேர அரசியலில் இறங்கப் போகிறார். 234 தொகுதிகளுக்கும் விஜய் நேரில் சென்று, பூத் கமிட்டி அமைப்பு பணிகளை பார்வையிடுகிறார். இதன் மூலம், வீட்டில் இருந்தே அரசியல் செய்கிறார் என்ற விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில், ஜனநாயகன் படம் முடிந்தவுடன், நடிகர் விஜய் முழுநேர அரசியலில் இறங்கி, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளார். இது, தமிழ்நாட்டு அரசியல் களத்தில் புதிய மாற்றத்திற்கான சிக்னலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.