அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அதிரடியாக வெளியேற்றி வருகிறார் அதிபர் டிரம்ப்.இந்த நடவடிக்கையின் தொடர்ச்சியாக 12 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைய தடை விதித்து இப்போது முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.இவை தவிர மேலும் 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து அதிரடி காட்டி இருக்கிறார். அதன்படி, ஈரான், ஆப்கானிஸ்தான், மியான்மர், சாத், காங்கோ, இகுவடோரியல் கயானா, எரித்ரியா, ஹைட்டி, லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 12 நாடுகளை சேர்ந்தவர்கள் இனி அமெரிக்காவில் நுழைய முடியாது. இந்த நாடுகள் அமெரிக்காவுக்கு பெரிய தலைவலியாக இருக்கிறதாம்.
உதாரணத்துக்கு ஆப்கனை எடுத்துக்கொண்டால், அங்கு தலிபான்கள் ஆட்சி நடக்கிறது. தலிபானை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்கா அறிவித்து இருக்கிறது. அந்த நாட்டில் இருந்து வரும் மாணவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி விடுகின்றனர். ஆப்கனில் இருந்து அமெரிக்கா வருபவர்களை அந்த நாடு முறையாக சோதிப்பது கிடையாது. அதே போல் மியான்மர் நாட்டினர் சுற்றுலா விசாவில் அமெரிக்கா வந்து விட்டு, சட்டவிரோதமாக தங்கி விடுகின்றனர். 27 சதவீதம் சுற்றுலா பயணிகள் நாடு திரும்புவது இல்லையாம்.
அப்படி தான் சாட், காங்கோ, கயானா, ஹைட்டி நாட்டினரும் சட்டவிரோதமாக தங்கி விடுகிறார்கள். இந்த நாடுகளை சேர்ந்தவர்கள் மட்டும் கிட்டத்தட்ட 49 சதவீதம் பேர் சட்டவிரோதமாக தங்குகிறார்களாம். ஈரானுடன் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பஞ்சாயத்து நிலவுகிறது. ஹமாஸ், ஹவுதி, ஹெஸ்புலா உள்ளிட்ட பயங்கரவாதிகளை ஈரான் வழிநடத்தி வருவதால் அந்த நாட்டுடன் பெரிய பகை இருக்கிறது. அதே போல் அமெரிக்காவின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபட்டு வருகிறது. எனவே தான் ஈரான் நாட்டினருக்கு அமெரிக்கா தடை போட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு நாட்டினரோடும் அமெரிக்காவுக்கு பிரச்னை உள்ளது. எனவே தான் 12 நாட்டினருக்கும் அமெரிக்கா வர டிரம்ப் தடை விதித்து விட்டார்.
இவை தவிர கியூபா, லாஸ், டோகோ, துர்க்மெனிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு அமெரிக்காவில் நுழைய கடும் கட்டுப்பாடு விதித்துள்ளார் டிரம்ப். அமெரிக்காவுக்கு வந்து அமெரிக்கர்களுக்கு எதிராக பிரச்னை செய்ய விரும்பும் வெளிநாட்டினரிடம் இருந்து அமெரிக்கர்களை பாதுகாப்பேன் என்று டிரம்ப் சொன்னார். அதை நிறைவேற்றவே இந்த நடவடிக்கை என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் அபிகேல் ஜாக்சன் கூறினார்.