தமிழக இளைஞர்கள் RRB தேர்வு எழுத தெலுங்கான சென்றநிலையில் திடீரென தேர்வு ரத்து செய்யப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தெற்கு ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு 2ஆம் நிலை தேர்வு இன்று நடைபெற இருந்தது. இதற்காக தமிழக இளைஞர்கள் தேர்வு எழுத தெலுங்கான சென்றநிலையில் தேர்வு மையங்களில் தேர்வு ரத்து தொடர்பான நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பல ஆயிரம் கி.மீ. கடந்து தேர்வு எழுதச் சென்ற தமிழக இளைஞர்கள் அலைக்கழிப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
ஏற்கனவே, தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்களுக்கு தெலுங்கானா மாநிலத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் கண்டனம் எழுந்தது. தேர்வு மையங்களை தமிழகத்திலேயே ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் ஒதுக்க முடியாது என ரயில்வே வாரியம் கூறியது.
கடைசி நேரத்தில் தேர்வு ரத்து
இன்று தேர்வு நடக்க இருந்த நிலையில், முன்னறிவிப்பும் இன்றி கடைசி நேரத்தில் தேர்வை ரத்து செய்ததால் ஆயிரக்கணக்கான தமிழக இளைஞர்கள் தவித்து வருகின்றனர். முன்கூட்டியே தேர்வை தள்ளிவைத்திருந்தாக் வீண் அலைச்சல் ஏற்பட்டிருக்காது என தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்: சு.வெங்கடேசன்
இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ள மதுரை எம்.பி.சு.வெங்கடேசன், RRB தேர்வு ரத்து செய்தது போதுமான முன்னெச்சரிக்கை செய்யாமல் இருந்தது ரயில்வே வாரியத்தின் அலட்சியத்தின் உச்சம் என கண்டனம் தெரிவித்துள்ளார். பிற மாநிலங்களுக்கு தேர்வு மையம் வரை சென்று திரும்பிய தேர்வர்கள் செலவு செய்த தொகையை இழப்பீட்டுத் தொகையாக ரயில்வே வாரியம் வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.