இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தங்க நகை அடமானக் கடனுக்கான புதிய மற்றும் கடுமையான 9 விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நிதி நிறுவனங்கள் முறையாக பணியாற்றும் வகையில் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. கடந்த மாதம் தங்க நகை மீட்பு மற்றும் கால நீட்டிப்பைத் தடை செய்ததும் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள முக்கியமான விதிமுறைகள் வருமாறு:
1. கடன் பெற முடியக்கூடிய அளவு:
தங்க நகையின் மதிப்பில் 75 சதவீதம் மட்டுமே கடனாக வழங்கப்படும். எடுத்துக்காட்டாக, நகையின் மதிப்பு ₹1,00,000 என்றால், அதிகபட்சமாக ₹75,000 வரை மட்டுமே கடன் பெற முடியும்.
2. உரிமையாளரின் ஆதாரம் அவசியம்:
தங்க நகையை அடமானம் வைக்கும் நபர், அந்த நகைக்கு உரிமையாளர் என்பதற்கான ஆதாரத்தை (வாங்கிய ரசீதி போன்றவை) வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.
3. தங்கத்தின் தூய்மை சான்றிதழ்:
22 காரட் அல்லது அதற்கு மேற்பட்ட தூய்மையுடைய தங்க நகைகள் மட்டுமே அடமானம் ஏற்கப்படும். வங்கிகள் தங்கத்தின் தரத்திற்கான சான்றிதழ் பெற்றே கடன் வழங்க வேண்டும்.
4. வெள்ளி பொருட்களுக்கும் கடன்:
தங்க நகைகள் மட்டுமின்றி, வெள்ளி நகைகளையும் அடமானம் வைத்து கடன் பெற அனுமதியுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
5. ஒரு நபருக்கான வரம்பு:
ஒரு நபர் அதிகபட்சமாக 1 கிலோ தங்க நகைகள் மற்றும் 50 கிராம் தங்க நாணயங்கள் வரை மட்டுமே அடமானம் வைக்க அனுமதிக்கப்படுவார்.
6. மீட்பிற்குப் பிறகு மட்டுமே மறுபடியும் அடமானம்:
முன்னதாக அடமானம் வைத்திருந்த தங்கத்தை முழுமையாக மீட்ட பிறகே அந்த நகைகளை மறுபடியும் அடமானம் வைக்கலாம். அடமானக் காலத்தை மீட்பு இல்லாமல் நீட்டிக்க முடியாது.
7. ஒப்பந்தத்தில் முழு விபரம்:
தங்க நகை அடமான ஒப்பந்தத்தில் – நகையின் விவரம், மதிப்பு, ஏல நடைமுறை உள்ளிட்டவை தெளிவாக இடம்பெற வேண்டும். இல்லையெனில் கடன் வழங்க முடியாது.
8. மீட்புக்குப் பிறகு 7 நாட்களில் நகை ஒப்படைப்பு:
கடன் தொகை திருப்பிச் செலுத்தப்பட்டவுடன், வங்கிகள் 7 வேலை நாட்களுக்குள் நகையை மீள ஒப்படைக்க வேண்டும். தாமதம் ஏற்பட்டால், வங்கிகள் தினமும் ரூ.5,000 அபராதம் செலுத்த வேண்டும்.
9. ஏற்கக்கூடிய தங்க வகைகள்:
அலங்காரத் தங்க நகைகள் மற்றும் குறிப்பிட்ட தங்க நாணயங்களே அடமானம் ஏற்கப்படும். வேறு வகையான தங்கப் பொருட்கள் ஏற்கப்படமாட்டாது.
இந்த புதிய விதிமுறைகள், தங்க அடமானக் கடன் நடைமுறையில் மிக முக்கியமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இது நுகர்வோரின் உரிமைகளையும் பாதுகாக்கிறது மற்றும் நிதி நிறுவனங்களின் பொறுப்பையும் உறுதி செய்கிறது. இதன் மூலம் கடன் வழங்கும் மற்றும் பெறும் நடைமுறையில் வெளிப்படைத்தன்மை ஏற்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.