பிரதமர் மோடி 2 நாள் பயணமாக குஜராத் சென்றுள்ளார். வதோதராவில் நடைபெற்ற ரோடு ஷோவின்போது, சாலையின் இருபுறமும் ஏராளமான மக்கள் காத்திருந்து தேசிய கொடியை அசைத்தும், மலர்கள் தூவியும் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
தாஹோத் மாவட்டத்தில், எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் உற்பத்தி ஆலை உட்பட 24000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் ஆலையில் உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதிக்காக எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் தயாரிக்கப்படும்.
இந்த ஆலையில் முதல் முதலாக தயாரிக்கப்பட்ட 9000 HP திறன் கொண்ட எலக்ட்ரிக் ரயில் இன்ஜின் இயக்கத்தை மோடி தொடங்கி வைத்தார்.
தாஹோத் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். 2014ம் ஆண்டு இதே நாளில் முதல் முறையாக பிரதமராக பதவியேற்றேன். கோடிக்கணக்கான இந்தியர்கள் என்னை ஆசீர்வதித்தனர்.
ஒவ்வொரு துறையிலும் இந்தியா முன்னேறி வருகிறது. இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற 140 கோடி இந்தியர்களும் பாடுபடுகிறார்கள்.
நம் நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையான அனைத்தையும் உள்நாட்டிலேயே நாம் தயாரிக்க வேண்டும். பண்டிகைகளின்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே மக்கள் வாங்கி பயன்படுத்த வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இதுதான் தேவை.
உற்பத்தி துறையில் உலகளவில் இந்தியா முன்னேறி வருகிறது. ஏற்றுமதியும் அதிகரித்து வருகிறது என பிரதமர் மோடி கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பேசிய மோடி, ஆபரேஷன் சிந்தூர் வெறும் ராணுவ நடவடிக்கை அல்ல; அது நம் உணர்ச்சிகளின் வெளிப்பாடு.
மோடியை எதிர்கொள்வது எவ்வளவு கடினம் என்பதை பயங்கரவாதிகள் கனவில் கூட கற்பனை செய்திருக்க மாட்டார்கள். பஹல்காம் படங்களை பார்த்து ரத்தம் கொதிக்கிறது. எனவே தான், மக்கள் விரும்பியதை செய்தேன்.
நமது சகோதரிகளின் குங்குமத்தை அழிக்க துணிபவர்கள் தங்களின் முடிவு நெருங்கிவிட்டது என்பதை உணர வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பதட்டம் அடைந்த பாகிஸ்தான் ராணுவம், பதிலடி கொடுக்க துணிந்தபோது, நமது படைகள் பாகிஸ்தான் ராணுவத்தையும் தோற்கடித்தன.
பிரிவினைக்கு பிறகு பிறந்த அந்த நாடு இந்தியாவுடனான பகைமை வளர்ப்பது; இந்தியாவுக்கு தீங்கு விளைப்பதையே குறிக்கோளாக கொண்டு இருக்கிறது.
ஆனால், நமது குறிக்கோள் வறுமை ஒழிப்பது, பொருளாதாரத்தை வலுப்படுத்துவது, நம்மை நாமே வளர்த்து கொள்வது தான்.
நமது பாதுகாப்பு படைகளும், பொருளாதாரமும் வலுவாக இருக்கும்போது மட்டுமே விக்சித் பாரத் சாத்தியம் ஆகும் என்று பிரதமர் மோடி கூறினார்.