ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார். தமிழகத்தில் அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன முறையில் கவுன்சிலர் பதவி வழங்க வகை செய்யம் 2 சட்ட திருத்த மசோதாக்களை கடந்த ஏப்ரல் 16ம் தேதி சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்திருத்த மசோதா மற்றும் ஊராட்சிகள் சட்டத்திருத்த மசோதா என்ற அவ்விரு மசோதாக்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த 2 மசோதாக்களுக்கும் இன்று ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சிகளில் 650 மாற்றுத்திறனாளிகளும் கிராம பஞ்சாயத்துக்களில் 12,913 மாற்றுத்திறனாளிகளும் கவுன்சிலராக நியமனம் செய்யப்படுவர். ஊராட்சி ஒன்றியங்களில் 388 மாற்றுத்திறனாளிகளும், மாவட்ட ஊராட்சிகளில் 37 மாற்றுத்திறனாளிகளும் வரும் காலங்களில் நியமன அடிப்படையில் கவுன்சிலராக தேர்வு செய்யப்படுவர் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவ மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்திருப்பது எதிர்பார்த்ததுதான். ஒருவேளை நாம் கோர்ட்டுக்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்திருக்கலாம் என ஸ்டாலின் கூறினார்.