தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்களின் ஓய்வூதிய உரிமைக்காக ஜாக்டோ ஜியோ அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றது. திமுக அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது என விஜய் விமர்சனம் செய்துள்ளார்.
தவெக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு ஊழியர்களின் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும், 2003க்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் (OPS) அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தற்போது உள்ள பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) அரசு ஊழியர்களுக்கு பயனளிக்காது, அவர்களின் நலனை பாதிக்கும் எனவும் கூறியுள்ளார்.

ஜாக்டோ ஜியோவின் போராட்டம் லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை சார்ந்த ஒன்று. இந்த போராட்டத்திற்கு தமிழக வெற்றிக் கழகம் முழுமையான ஆதரவை தெரிவிக்கிறது. திமுக அரசு இதை புறக்கணிக்காமல் விரைவில் தீர்வு காண வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். வெற்றி கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு செய்யும் கபட நாடகத்தால் விடுமுறை நாளிலும் அரசு ஊழியர்கள் போராட்ட களத்தில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறோம் என மார்தட்டும் திமுக அரசு, இதில் மட்டும் புறமுதுகு காட்டுவது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை, அரசு தொழிலாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் என அரசு சார்பில் பல்வேறு துறைகளின் ஊழியர்களும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஒற்றுமையாக பங்கேற்று வருகின்றனர். விரைவில் அரசு OPS முறை திரும்ப கொண்டு வராவிட்டால், போராட்டம் மேலும் தீவிரமாகும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.