2025 IPL சீசனின் முதல் போட்டியில் MI தோல்வியை சந்தித்தாலும், விக்னேஷ் புதூர் தனது அசாதாரணமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இடதுகை ஸ்பின்னரான அவர், CSK அணியின் பேட்ஸ்மேன்களை கடுமையாக சோதனைக்கு உட்படுத்தினார். ரச்சின் ரவீந்திரா மட்டுமின்றி மற்ற பேட்ஸ்மேன்கள் அவரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறினர்.
விக்னேஷ் புதூர் யார்?
விக்னேஷ் புதூர் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். சிறிய கிரிக்கெட் லீக்களிலேயே தனது திறமையை வெளிப்படுத்தி, கேரள கிரிக்கெட் லீக் (KCL) டி20 தொடரில் ஆலப்புழை ரிப்பில்ஸ் அணிக்காக விளையாடினார். கேரளா மாநில U14, U19 அணிகளில் விளையாடாத இவர், தென் ஆப்ரிக்கா MI கேப்டவுன் அணிக்காக நெட் பௌலராக தேர்வானார்.
அங்கு அவரது இடதுகை பந்துவீச்சு MI தேர்வாளர்களை கவர, 2025 IPL ஏலத்தில் ரூ.30 லட்சத்திற்கு வாங்கப்பட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னருக்கு சாதகமானதானதால், முதல் போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த
விக்னேஷ் புதூர், ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, தீபக் ஹூடா ஆகிய முக்கியமான 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கடைசி வரை போராடும் வாய்ப்பை அளித்தார். அவரின் மாயாஜால ஸ்பின், எதிரணி அணிக்கு எளிதாக ஆட வழியில்லாமல் செய்தது.
முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி,
விக்னேஷ் புதூரின் முதல் ஆட்டமே அசத்தலாக இருந்தது. மும்பை இந்தியன்ஸ் எதிர்காலத்தில் அவரை முக்கிய ஸ்பின்னராக வளர்த்தெடுக்கும் என்று பாராட்டினார்.
தோனியின் பாராட்டு
போட்டி முடிந்தவுடன், தோனி வந்து விக்னேஷ் புதூரின் முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். இது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு முக்கிய தருணமாக அமைந்தது.
ஏழ்மையான பின்னணி
விக்னேஷ் புதூர் ஒரு எளிய குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது தந்தை ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். சிறிய வயதிலிருந்தே பெரிய அளவிலான பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், தனது தனிப்பட்ட முயற்சியால் முன்னேறினார். தமிழ்நாடு பிரிமியர் லீக் (TNPL) மற்றும் கேரளா லீக் போன்ற போட்டிகளில் தொடர்ந்து விளையாடி, தற்போது ஐபிஎல்லில் பெரிய வாய்ப்பைப் பெற்றுள்ளார்.
MIக்கு தொடரும் முதல் போட்டி தோல்வி
மும்பை இந்தியன்ஸ், கடந்த 13 ஆண்டுகளாக முதல் போட்டியில் வெற்றி பெற முடியாமல் தவிக்கிறது. 2012 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை, IPL சீசனின் முதல் போட்டியில் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது. 2018, 2020 ஆண்டுகளில் CSK அணியிடம் முதல் போட்டியில் தோற்று, இந்த ஆண்டுm மீண்டும் அதே தோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.