ஆமதாபாத்தில் நடந்த 2025 ஐபிஎல் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. பல ஆண்டுகளாக கோப்பை வெல்லாமல் இருந்த ஆர்சிபி அணிக்காக இது ஒரு வரலாற்றுச் சாதனை. இந்த வெற்றிக்குப் பிறகு, அணியின் முக்கிய வீரரும் ரசிகர்களின் மனதில் ஓர் இடத்தை பிடித்தவருமான விராட் கோலி, உணர்ச்சியில் ஆழ்ந்து பேசினார்.
வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது: “இந்த வெற்றி மட்டும் RCB அணிக்கானது அல்ல; ஒவ்வொரு ரசிகருக்குமானதும் கூட. கடந்த 18 ஆண்டுகளாக இந்த அணிக்காக நான் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறேன் – என் இளமை, என் உச்சம், என் அனுபவம். ஒவ்வொரு சீசனிலும் நம்பிக்கையுடன் நுழைந்தேன். கடைசியாக இந்த தருணம் வந்தது நம்ப முடியாத உணர்வாக உள்ளது.”
கடைசி ஓவர்கள் நேரத்தில் கண்களில் கண்ணீர் வந்ததாகவும், “இந்த அணிக்கு என் இதயமும் ஆன்மாவும் சொந்தமானது. நான் ஐபிஎல் விளையாடும் வரை ஆர்சிபிக்காகத்தான் விளையாடுவேன்” என்றார். மேலும், இன்றைய வெற்றியில் ஏபி டிவில்லியர்ஸ் போன்ற முன்னாள் வீரர்களின் பங்களிப்பும் மறக்க முடியாதது என குறிப்பிட்டார்.
விராட் கோலி தனது உரையின் முடிவில், “வெற்றி எங்களின் ஒற்றை முயற்சியால் மட்டுமல்ல. ஒவ்வொரு வீரரும், அவர்களின் குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், நிர்வாகம் என அனைவரும் இணைந்ததால்தான் இது சாத்தியமானது. இன்றைய தினம் என் வாழ்க்கையின் முக்கிய தருணங்களில் ஒன்று” என கூறினார்.