மோடி இந்தியாவின் Prime Minister அல்ல, அவர் Picnic minister என மாநிலங்களவை உறுப்பினரும், மதிமுக பொதுச்செயலாளுமான வைகோ, பிரதமர் மோடியை கடுமையான வார்த்தைகளால் வறுத்தெடுத்தார்.
80 வயதிலும் மாநிலங்களவையில் மணிப்பூர் கலவரம் குறித்து பேசிய வைகோ, மணிப்பூர் இந்தியாவின் மாநிலம் இல்லையா. மணிப்பூர் செல்வதை தவிர பிரதமர் மோடிக்கு என்ன வேலை இருக்கிறது எனக் கேள்வி எழுப்பினார். மணிப்பூர் செல்லாமல் மற்ற அனைத்து நாடுகளுக்கும் செல்லும் பிரதமர் மோடி, இந்தியாவின் Prime Minister அல்ல, அவர் Picnic minister என சாடினார். இதனால் அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குறுக்கிட்ட மாநிலங்களவைத் துணை தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை அனுமதிக்கமுடியாது என வைகோவை கண்டித்தார். அப்போது, மாநிலங்களவை துணை தலைவருக்கும், வைகோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
ஆவேசமான வைகோ, எங்கள் வாழ்வும், வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு, எப்பக்கம் புகுந்து வந்துவிடும் இந்தி, எத்தனை பட்டாளம் கூட்டிவரும், கன்னங் கிழிந்திட நேரும் வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம் என முழங்கினார்.
தொடர்ந்து பேசிய வைகோ, என்னை பேசக்கூடாது என்று சொல்ல உரிமை இல்லை. நான் வைகோ, அண்ணா இயக்கத்தில் இருந்து வந்தவன். இந்தி திணிப்பை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை குப்பை தொட்டியில் தூக்கி வீச வேண்டும் எனக் கடுமையாக பேசினார்.