தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, இன்று அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சில தனியார் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. ஏற்கனவே பள்ளிகளின் தூய்மைப் பணிகள் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
36 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்குத் திரும்பினர். குறிப்பாக, முதல் முறையாக பள்ளி பருவத்தை தொடங்கும் மழலைப் பிஞ்சுகளை வரவேற்க ஆசிரியர்கள் சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். அரசு பள்ளிகளில் இன்று முதல் நாளிலேயே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் மாணவர்களிடம் வழங்கப்பட உள்ளது.
பள்ளிகள் திறக்கும் நாளையொட்டி, மாணவர்களை உற்சாகத்துடன் வரவேற்க அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், புதிய கட்டணமில்லா மாணவர் பேருந்து அட்டைகள் வெளியிடப்படும் வரை பழைய அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையடுத்து, 2025-26 கல்வியாண்டுக்கான பள்ளி வேலை நாட்கள், தேர்வுகள், விடுமுறைகள் உள்ளிட்ட முழுமையான நாள்காட்டி விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.