சேலம் மாவட்டம், நான்கு ரோடு அருகே தனியார் கிளினிக் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் புகழ் முத்துக்குமரன் மற்றும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் ஆகியோர் கலந்து கொண்டு கிளினிக்கை திறந்து வைத்தனர். இதை தொடர்ந்து, முத்துக்குமரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழ்மொழி பற்றிய கருத்து
இந்த பேட்டியில் தமிழ்மொழியின் முக்கியத்துவம் மற்றும் மொழி திணிப்பு குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
"எந்த ஒரு மொழியையும் யாராலும் திணிக்க முடியாது. தமிழ்நாட்டிற்கு என்றும் தமிழ் மொழிதான் அடையாளம். யார் என்ன செய்தாலும் தமிழ் தமிழ்தான்." என்று கூறிய அவர், மொழி திணிப்பு தற்போது மட்டும் நடைபெறுவது அல்ல, இது நூற்றாண்டுகளாக நீடித்துவரும் பிரச்சினை என தெரிவித்தார். மேலும், தமிழ் மொழிக்காக கடந்த காலங்களில் மக்கள் பல போராட்டங்களும், தியாகங்களும் செய்துள்ளதை குறிப்பிட்டார்.
இந்தி மொழி திணிப்பு தொடர்பாக,
"அனைவரும் எந்த மொழியையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், யாராலும் ஒரு மொழியை கட்டாயமாக திணிக்க முடியாது. பாடல், விளையாட்டு போன்றவற்றை ஆர்வத்துடன் கற்றுக்கொள்வது போல, மொழியையும் விருப்பத்தோடு கற்றுக்கொள்ள வேண்டும்." என்று கூறினார்.
தற்போதைய தலைமுறையின் தமிழ் மீதான ஆர்வம்
தமிழ்மொழியின் எதிர்காலம் குறித்து பேசிய முத்துக்குமரன், "தமிழகத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளில் மாணவர்களை சந்தித்து வருகிறேன். அவர்கள் தமிழ்மீது கொண்டிருக்கும் அன்பும், தன்னம்பிக்கையும் எனக்கு பெருமை தருகிறது. இன்றைய தலைமுறையினருக்கு தமிழ் மொழியில் உறுதியான பற்றியது இருப்பதை உணர முடிகிறது." என்றார்.
சினிமா பயணம் குறித்து கருத்து
தனது திரைப்பயணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த முத்துக்குமரன், "சினிமா குறித்த அறிவு இல்லாமல் வந்தவன். ஆனால், கற்றுக்கொண்டு வருகிறேன். பிக்பாஸ் வெற்றி பெற்ற பிறகு பல வாய்ப்புகள் கிடைத்தன. தற்போது பல துறைகளில் கற்றுக்கொள்ள முயற்சி செய்து வருகிறேன்." என தெரிவித்தார்.
சமூக பணிகளில் பங்கேற்பு
கிளினிக் திறப்பு விழாவிற்கு பிறகு முத்துக்குமரன் மருத்துவ முகாமில் கலந்து கொண்டார். மருத்துவமனை கட்டமைப்பு, சிகிச்சை முறைகள் குறித்து தகவல் பெற்ற அவர், சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட விருப்பம் இருப்பதாகவும் தெரிவித்தார்.