சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.
தமிழக பட்ஜெட் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 30ஆம் தேதி வரை நடக்க உள்ளது. இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக இன்று சட்டப்பேரவையில் கொண்டு வந்தது.
நம்பிகையில்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கிய நிலையில், அப்பாவு பேரவையை விட்டு சென்றார். துணை சபாநாயகர் பிச்சாண்டி தலைமையில் நடந்த இந்த குரல் வாக்கெடுப்பு தோல்வியடைந்தது. 154 பேர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 63 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் தோல்வியடைந்தது. அதிமுக தீர்மானத்துக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் 2 குரல் வாக்கெடுப்பிலும், டிவிஷனிலும் தோல்வியடைந்தது.
முதலமைச்சர் பேச்சு
தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யார் மீது யார் வேண்டுமானாலும் விமர்சனம் வைக்கலாம், நடுநிலையோடு செயல்படுபவர் பேரவைத் தலைவர் அப்பாவு என்றார். இந்த அரசின் மீது குற்றம், குறை கூற வாய்பில்லாததால் இப்படி ஒரு தீர்மானம் அதிமுக கொண்டு வந்ததா என கேள்வி எழுப்பிய முதல்வர், அதிமுக உட்கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தால் அதை திசைதிருப்ப இப்படி ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டதா எனவும் கேள்வி எழுப்பினார்.